தென்னிந்திய திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் கே.பி.செளத்ரி. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் இவரே ஆவார். மேலும், பவன் கல்யாணின் கப்பர்சிங் படம் மட்டுமின்றி தெலுங்கில் பிரபலமான சீதம்மா வகீட்லோ ஸ்ரீமல்லே செட்டு, அர்ஜுன் சுரவரம் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை:
கேபி செளத்ரி கோவாவில் உள்ள சீயோலிம் என்ற பகுதியில் வசித்து வந்தார். வழக்கமாக அவர் காலையில் வெளியில் வரும் நேரத்தை கடந்தும் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமலே இருந்தது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
அப்போது, கேபி செளத்ரி வீட்டின் உள்ளே தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதையால் சறுக்கிய வாழ்க்கை:
கேபி செளத்ரியின் முழுமையான பெயர் சங்கர கிருஷ்ணபிரசாத் செளத்ரி. இவர் ஆந்திராவிஜ் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்து வந்த இவர் மீது கடந்த 2023ம் ஆண்டு போதைப் பொருள் வழக்கு ஒன்று பதிவானது. இந்த வழக்கின் அடிப்படையில் அவர் சைபர்பாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த கைதுக்கு பிறகு அவர் வாழ்க்கை தலைகீழாக மாறியது என்றே திரையுலகினர் கூறுகின்றனர். இந்த கைது காரணமாக அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார். தொழில் ரீதியாக ஏராளமான நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டது. இதையடுத்து, அவர் தனது வாழ்வைப் புதியதாக தொடங்க கோவாவிற்கு சென்றார்.
தொழில் நஷ்டம்:
கோவாவில் புதியதாக கிளப் ஒன்றைத் தொடங்கினார். ஆனால், அந்த வியாபாரத்திலும் அவரால் பெரிதும் ஜொலிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. கடன் தொல்லை, பண நெருக்கடி, வியாபாரத்தில் நஷ்டம் என தொடர் நெருக்கடியில் சிக்கிக் கொண்ட கேபி செளத்ரி கடும் மன உளைச்சலில் சில நாட்களாக காணப்பட்டார்.
இதையடுத்து, அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேபி செளத்ரியின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது குடும்பத்தினர் பல்வஞ்சாவில் வசித்து வருகின்றனர். கேபி செளத்ரியின் பிரேதத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.