1978 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி பைரவி என்கிறத் திரைப்படம் வெளியானது. மூன்று முடிச்சு, 16 வயதினிலே, அவர்கள் ஆகியத் திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தவர் ரஜினிகாந்த். பைரவி திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். பைரவி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைகின்றன.


வில்லன் ரஜினிகாந்த்


பைரவி திரைப்படத்தின் கதாசிரியாரான கலைஞானம் தான் வைத்திருந்த அண்ணன்-தங்கை பற்றிய கதையை படமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். இதுகுறித்து தயாரிப்பாளர் சின்னப்ப தேவரிடம் தெரிவித்தபோது அந்தப் படத்தைத் தயாரிக்க சம்மதித்தார் சின்னப்பத் தேவர். உண்மையான சிக்கல் இனிமேல்தான் தொடங்க இருந்தது.


கலைஞானம் இந்தப் படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்தை மனதில் வைத்திருந்துள்ளார். அந்த சமயத்தில் வெளிவந்த படங்களில் முரட்டுத்தனமான ஒரு வில்லனாக ரசிகர்களால் அறியப்பட்டு வந்தார் ரஜினி. திடீரென்று கதாநாயகனாக  அவரை ஏற்றுக்கொள்ள தயாரிப்பாளருக்கு மனம் வரவில்லை. அவரை சம்மதிக்க வைப்பதற்கு கலைஞானம் சற்று போராட வேண்டியதாக இருந்தது. ஒரு வழியாக தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். ஆனால் அனைவரது மனதிலும் படம் வெற்றிபெறாமல் போய்விடுமோ என்கிற பயம் இருந்துகொண்டுதான் இருந்தது.


14.01.1978 ஆம் ஆண்டு பைரவி படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏ.வி,எம் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டது. துவக்க விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலந்துகொண்டார். அவரது ஆசிர்வாதத்துடன் தொடங்கியது பைரவி திரைப்படம்.


கதாநாயகன் ரஜினிகாந்த்


பைரவி படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்துக்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பளமாகத் தரப்பட்டது. படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன . அறிமுக இயக்குநர் பாஸ்கர் படத்தை இயக்கினார். சென்னை பிளாஸா திரையரங்கத்தின் முன் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ பைரவி’ என்று 35 அடி கட் அவுட் வைக்கப்பட்டது.


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதுவரை அனைவரும் வில்லனாக பார்த்த ரஜினியை ஒரு பாசக்கார அண்ணனாக அவரைப் பார்த்து நெகிழ்ந்து போனார்கள். படம் வெற்றிபெறுமா இல்லையா என்கிற குழப்பத்தில் இருந்த அனைவருக்கும் பதில் சொல்லும் வகையில் 100 நாட்கள் ஓடியது பைரவி திரைப்படம். ரஜினிக்கு ஐந்தாயிரம் சம்பளமாக கொடுத்த சின்னப்ப தேவர் 50,000 ரூபாய் சம்பளம் கொடுத்தார். அன்று ரஜினி மீது கலைஞானத்திற்கு இருந்த நம்பிக்கையை  தயாரிப்பாளர் மறுத்திருந்தால் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ஹீரோவாக பார்க்கும் வாய்ப்பு ஒரு வேளை நமக்கு கிடைக்காமல் ஆகியிருக்கலாம். சற்று மிகைப்படுத்துவதாக தோன்றினால் ஒன்றை யோசித்துப் பாருங்கள். எத்தனை நடிகர்கள் இயக்குநர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட ஒரு வாய்ப்பினால் இன்று அடையாளம் தெரியாமல் மறைந்துவிட்டிருக்கிறார்கள் என்று.... 


வெறும் ஸ்டைலை மட்டுமே வைத்துக்கொண்டு இவ்வளவு காலம் அவர் காலம் தள்ளவில்லை... அவரிடம் இருந்த அபாரமான நடிப்பும் திறமையுமே இன்னும் அவரை சூப்பர் ஸ்டாராக கொண்டாட வைக்கிறது. அதற்கு பைரவி திரைப்படமே அவருக்காக விழுந்த விதை...!