யார் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு சிறந்த மாநிலம் தான் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


தொழில் 4.O தொடங்கிவைப்பு:


சென்னை அடுத்த ஒரகடத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 726 கோடி ரூபாய் மதிப்பில் தொழில் 4.Oவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து 22 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இங்கு, ஐடிஐ மாணவர்களுக்கு தேவையான தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.


”தலைநிமிர்ந்த தமிழகம்”


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ள தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரனை, தமிழ்நாட்டு இளைஞர்கள் உதாரணமாக எடுத்துக்கொண்டு முன்னேற்றம் காண வேண்டும். யார் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்து துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாகவும், தலைநிமிர்ந்து கம்பீரமாகவும் நின்றுகொண்டுள்ளது. அனைத்து தொழில்களிலும் சிறந்த மாநிலகமாக விளங்கும் தமிழ்நாடு பல்வகை பொருளாதாரத்துடன் கூடிய மாநிலம் ஆகும். ஆட்டோ மொபைல், மின்னணு சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், நிதிச்சேவைகள் அதுதொடர்பான நிறுவனங்கள், மின்னணு வாகனங்கள், தோல் சார்ந்த காலணி மற்றும் தோல் சாரா உற்பத்தி தொழில்கள், பொறியியல், ஜவுளி உள்ளிட்ட பல துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது.


தொழில் முதலீடுகள் விவரம்:


அண்மையில் வெளியான தொழில்துறை ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக தொற்சாலைகள் உள்ளன. அதிக பணிபுரியக்கூடிய தொழிலாளர்களும் இருக்கின்றனர். வளர்ந்து வரும் புதிய துறைகளிலும் தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது. விண்வெளி, பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட உற்பத்தி துறையிலும் தமிழகம் அபரிவிதமான வளர்ச்சி கண்டுள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக, உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாடு அரசின் guidance tamilnadu அலுவலகத்தின் மூலமாக கடந்தாண்டு ஜனவரி முதல் கடந்த மே மாதம் வரையில் 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம், 2 லட்சத்து 3 ஆயிரத்து 279 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 596 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த முதலீடுகள் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என நான் பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். 2021-22 ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 613 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 393 ஆகவும் இருந்தது. திமுக அரசு பொறுப்பேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம், 2022-23ம் ஆண்டில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 ஆகவும் உயர்ந்துள்ளது” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.