ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியது. ஆனால், கடந்த நான்கு நாட்களில் படத்தின் வசூல் தொடர்ந்து சறுக்கி வருகிறது.
ரஜினிகாந்துடன் அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், செளபின் சாஹிர், உபேந்திரா என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஆனாலும், படம் வசூலில் சறுக்குவதற்கான காரணம் என்ன? என்று காணலாம்.
1. ஏ சான்றிதழ்:
தமிழ்நாட்டில் அதிகளவு குடும்ப ரசிகர்களை கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். இந்த சூழலில், கூலி படத்தில் அதிகளவு வன்முறை காட்சிகளும், ரத்தக்காட்சிகளும் இருந்ததால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால், ரஜினி படத்திற்கு வழக்கமாக வரும் குடும்ப ரசிகர்கள், குழந்தைகள் இந்த படத்திற்கு வர இயலாத சூழல் உருவாகி வசூலில் பின்னடவை உண்டாக்கியது.
2. அளவுக்கு அதிகமான வன்முறை:
ரஜினி படம் என்றாலே கதை, காமெடி, கலாட்டா, சென்டிமென்ட், ஆக்ஷன் ஆகியவை கலந்த கலவையாகவே இருக்கும். ஆக்ஷன் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் சென்டிமென்ட், காமெடி என எதுவுமே கிடையாது. முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் சண்டை காட்சிகளே உள்ளது. அதுவும் வன்முறை அதிக அளவு படத்தில் இடம்பெற்றுள்ளது.
3. விக்ரம் சாயல்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் விக்ரம். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிகவும் பிரபலம். கூலி படத்தில் வரும் சில கதாபாத்திரங்களும் விக்ரம் படத்தை நினைவூட்டியது. நாகர்ஜுனா மகனை காதலிக்கும் ரச்சிதாவின் கதாபாத்திரம் ஏஜெண்ட் டீனாவையும், அமீர்கானுக்கு தரும் பில்டப் ரோலக்ஸ் கதாபாத்திரத்தையும் நினைவுப்படுத்தியது.
4. லாஜிக் ஓட்டைகள்:
கதையின் மையக்கருவாக உள்ள சத்யராஜுன் கண்டுபிடிப்பு கடலையே கட்டி ஆளும் நாகர்ஜுனா போன்ற வலுவான வில்லனுக்கு தேவைப்படும் அவசியமான ஒன்று என்பதை திரைக்கதை ரசிகர்களுக்கு போதுமான காரணங்களுடன் கடத்தவில்லை. சத்யராஜின் கண்டுபிடிப்பும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மின்சார சுடுகாடுதானே என்று ரசிகர்கள் எளிதாக கடந்து போகும் ஒன்றாகவே உள்ளது.
5. காளீசா இன்னும் வந்திருக்கலாம்:
படத்தில் 30 வருஷமே ஒருத்தனை ஆஃப்லைனிலே வைத்திருக்கிறேன் என்ற வசனம் ரஜினியை காட்டிலும் உபேந்திராவிற்கே பொருந்துகிறது. அவர் சில நிமிடங்கள் வந்தாலும் அந்த காளீசா கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்தை இன்னும் வலுப்படுத்தியிருந்தால் இன்னும் பலமாக இருந்திருக்கும்.
6. கேமியோ தேவையா?
ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியாக இருந்தது அமீர்கானின் தாஹா கதாபாத்திரம். சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு நிகராக நாகர்ஜுனா பில்டப் தந்தும், தாஹா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அமீர்கான் போன்ற மிகப்பெரிய நடிகரை இன்னும் வலுவாக பயன்படுத்தியிருந்தால் ஒரு திருப்தியுடன் ரசிகர்கள் படம் முடிந்து திரையரங்கில் இருந்து வெளியே வந்திருப்பார்கள்.
7. ஓவர் ஹைப்:
இன்றைய காலகட்டத்தில் பல படங்கள் தோல்வி அடைவதற்கான முக்கிய காரணமாக அமைவது அந்த படங்களுக்கு தரப்படும் ஓவர் பில்டப்பே ஆகும். ரஜினி படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும். லோகேஷ் கனகராஜின் படம் என்பதால் எல்சியு, 100 பாட்ஷாவுக்கு சமம் என ஒவ்வொருவரும் தந்த பில்டப்புகளே படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.