ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியானது கூலி திரைப்படம். ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர் மற்றும் கெளரவ வேடத்தில் அமீர்கான் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர்.
கூலி வசூலில் எகிறியதா? சறுக்கியதா?
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் உலகெங்கும் முதல் நாளில் மட்டும் 151 கோடி ரூபாய் வசூல் குவித்திருந்தது. இந்தியாவில் 65 கோடி ரூபாய் வசூல் குவித்த நிலையில், இரண்டாவது நாளான நேற்று முன்தினம் இந்தியாவில் ரூபாய் 54.75 கோடி ரூபாய் வசூல் குவித்தது.
3வது நாள் வசூல் எவ்வளவு?
படம் வெளியாகி முதல் சனிக்கிழமையான நேற்று படத்தின் வசூல் சற்று சரிந்துள்ளது என்றே கூறலாம். 3வது நாளான நேற்று சுமார் ரூபாய் 39 கோடி வசூல் செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் மட்டும் கூலி படம் ரூபாய் 158.25 கோடி வசூல் செய்துள்ளது.
3வது நாளான நேற்று கூலி படத்திற்கான காலை காட்சி தமிழிலே 46.51 சதவீதம் மட்டுமே நிரம்பியிருந்தது. மதிய காட்சிக்கு 66.84 சதவீதம் நிரம்பியிருந்தது. மாலைக் காட்சிக்கு 71 சதவீதமும், இரவுக் காட்சிக்கு 80 சதவீதமும் இருக்கைகள் நிரம்பியிருந்தது.
இன்று கல்லா கட்டுமா?
தொடர் விடுமுறையின் கடைசி நாளும், வார விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகளவு ரசிகர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சென்னையை காட்டிலும் திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் நேற்று ரசிகர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது. திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் 89 சதவீதம் இருக்கைகள் முழுமையாக இருந்தது. சென்னையில் 88.75 சதவீதம் இருக்கைகள் நிரம்பியுள்ளது.
மதுரையில் 69 சதவீதமும், கோவையில் 84 சதவீதமும், பாண்டிச்சேரியில் 86.50 சதவீதமும், சேலத்தில் 65 சதவீதமும், வேலூரில் 73.75 சதவீதமும் இருக்கைகள் நிரம்பியிருந்தது. பெங்களூரில் 51 சதவீதமும், கொச்சியில் 40 சதவீதமும், மும்பையில் 39.25 சதவீதமும், திருவனந்தபுரத்தில் 28 சதவீதமும், டெல்லியில் 26.50 சதவீதமும் இருக்கைகள் நிரம்பியிருந்தது.
ரூ.1000 கோடியா?
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைக் காட்டிலும் இன்று ரசிகர்கள் கூட்டம் அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது. கூலி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படம் நான்கு நாட்களில் ஓரளவு வசூலை எட்டியுள்ளது. ஆனால், 1000 கோடி ரூபாய் வசூலை எட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே உண்மை ஆகும். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கூலி படம் முழுக்க முழுக்க ரத்தக்காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இருந்ததால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழே தணிக்கை குழு அளித்தது. இதனால், இந்த படத்திற்கு குடும்பத்துடன் ரசிகர்கள் சென்று படம் பார்ப்பதில் அனுமதி கிடையாது. பொதுவாக, குடும்ப ரசிகர்களை அதிகளவு கொண்ட நடிகர் ரஜினிகாந்த்.
ஆனால், அவரது படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியதால் ரசிகர்கள் பெரும்பாலானோர் தங்களது குடும்பத்துடன் சென்று படம் பார்க்க இயலவில்லை. இதுவும் படத்தின் வசூல் சறுக்கி வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.