நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படையப்பா படம் ரீ-ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
1999ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் “படையப்பா. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, ராதாரவி, நாசர், ரமேஷ் கண்ணா, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, அப்பாஸ், ப்ரீதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் சொந்தமாக தயாரித்திருந்தார்.
ரீ-ரிலீஸாகும் படம்
இப்படியான நிலையில் 25 ஆண்டுகள் கழித்து படையப்பா படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மீண்டும் வெளியாகிறது. அதன்படி டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்தநாளன்று அந்த படம் வெளியாகிறது. இதனை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் நடிகர் ரஜினிகாந்தின் 25 ஆம் ஆண்டு திரை வாழ்வை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அவர் தற்போது சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதனை சிறப்பிக்கும் பொருட்டு படையப்பா படம் ரீ-ரிலீசாகிறது.
படையப்பா படத்தின் ட்ரெய்லர்
நேர்காணல் அளித்த ரஜினி
இந்த நிலையில் படையப்பா படம் ரஜினிக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று. அப்படம் ரீ-ரிலீஸாவதை முன்னிட்டு ரஜினி கடந்த சில நாட்களுக்கு முன்பு 30 நிமிட நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அதில் படையப்பா படம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார். பொன்னியின் செல்வன் படத்தில் வரும் நந்தினி கேரக்டர் தான் படையப்பா படம் உருவாக காரணம் என்றும், முதலில் ரம்யா கிருஷ்ணன் வேடத்தில் நடிக்க வைக்க ஐஸ்வர்யா ராயை முடிவு செய்ததாகவும் கூறியிருந்தார்.
மேலும் சிவாஜி கணேசனை முதலில் நடிக்க வைக்க இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் சம்மதிக்கவில்லை எனவும், அதேபோல் கிளைமேக்ஸில் ரம்யா கிருஷ்ணன் கேரக்டர் திருந்துவது போலவும் உருவாக்கினார். ஆனால் அது பத்தில் ஒன்றாக மாறிவிடும் என்றும், அவர் திருந்துவது போல இருக்க வேண்டாம் எனவும் ரஜினி வலியுறுத்தியுள்ளார். இப்படி ஏகப்பட்ட நினைவுகளுடன் உருவாக்கப்பட்ட படையப்பா படம் ரஜினி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. குறிப்பாக இப்படத்தை பெண் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டரில் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.