நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பிரபல துணை நடிகரான ஜீவா ரவி இணைந்துள்ளது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Continues below advertisement

தமிழக வெற்றிக் கழகம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் 2024ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அக்கட்சி 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முதல்முறையாக களம் இறங்குகிறது. திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை எதிர்த்து மாற்று அரசியல் என்ற போர்வையில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் பலரும் இணைந்து வருகின்றனர். தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அரசியல் மேடை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இணைந்தார். அடுத்ததாக ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் ஜீவா ரவி தவெகவில் இணைந்துள்ளார். 

Continues below advertisement

தம்பி மக்கள் நீதி மய்யம்.. அண்ணன் தவெக

அவர் கட்சியில் சேர்ந்தவுடன் நேரடியாக செங்கோட்டையனை மரியாதை நிமித்தமாகவும் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜீவா ரவி, “என்னுடைய குடும்பம் மிகப்பெரிய பின்னணி கொண்டது. கடந்த சில ஆண்டுகளாகவே ஏதாவது சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் இருந்தது. ஆனால் எனக்கு திமுக, அதிமுகவில் சேர விருப்பமில்லை. நான் விஜய்யுடன் கத்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறேன். அவர் என் மகன் கல்யாணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார். விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு தொடங்கியதில் இருந்தே அவரின் அரசியல் பாதையை கவனித்து வருகிறேன். 

அவரின் அரசியல் வருகையை தமிழக மக்கள் வரவேற்கிறார்கள் என்பதற்கு சாட்சி தான் விஜய்யை காண கூடும் கூட்டமாகும். சமீபத்தில் அப்படியொரு கூட்டத்தை நான் பார்த்தது இல்லை. அவரைப் பார்க்க பெண்கள், இளைஞர்கல் திரண்டு வருகிறார்கள். இந்த கூட்டத்தை குறைத்து எடைபோட முடியாது. இதுவரை முதலமைச்சராக இருந்தவர்கள் பட்டியலைப் பார்த்தாலே சினிமாவுக்கு அரசியலுக்கு எப்படியான தொடர்பு இருப்பதை புரிந்துக் கொள்ள முடியும். 

என்னுடைய சொந்த ஊர் கோபிசெட்டிப்பாளையம். செங்கோட்டையன் அண்ணனை எங்க குடும்பத்துக்கு பல வருடமாக தெரியும். அதனால் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். என்னுடைய தம்பி மகேந்திரன், கமலுடன் உள்ளார். அதனால் பிரச்னை ஏற்பட்டு விடாதா என பொதுச்செயலாளர் ஆனந்த் கூட கேட்டார். ஆனால் என் வீட்டை பொறுத்தவரை அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அவரவர் விருப்பங்களை மதிக்கிறோம் என ‘ஜீவா’ ரவி தெரிவித்துள்ளார்.