ரஜினிகாந்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ரசிக்கலாம். மாஸான கமர்ஷியல் நடிகராக ஒரு பக்கமும் உணர்ச்சிகரமான நடிகராக மறுபக்கம் என ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய வித்தியாசத்தைப் பார்க்கலாம். ஒரு டை ஹார்ட் ரஜினி ரசிகர் ரஜினியிடம் என்னவெல்லாம் ரசிப்பார் என்று பார்க்கலாம்!





  • சிகரெட்டை தூக்கிப் போட்டு ரஜினி பிடிப்பதில் இருக்கும் லாவகம் வேறு எந்த நடிகருக்கும் வராதது. சிகரெட்டை பிடிப்பது இல்லை அதை வாயில் பிடிக்கும்போது எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் அந்தக் காட்சியில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டும் இருக்க முடியும் அவரால்..

  • ரஜினி ஓடுவது பிற நடிகர்களைக் காட்டிலும் தனித்து தெரியக்கூடியது. ஓடும்போது இரண்டு கைகளும் லேசாக தளர்ந்த கதியில் அசைந்துக் கொண்டிருக்க, ஸ்லோ மோஷனில் இல்லாமலே அந்த உணர்வை அளிப்பார் ரஜினி.

  • படிக்காதவன் படத்தில் ஊரத் தெரிஞ்சுக் கிட்டேன் பாடலில் சோகத்தில் இருக்கும் ரஜினியின் சட்டையிலும் முகத்திலும் இருக்கும் வியர்வையைப் கவனித்திருக்கிறீர்களா? தன் தம்பிக்காக உழைத்த ஒரு அண்ணனின் தியாகம் அந்த வியர்வையில் தெரியும்.



  • குரு - சிஷ்யன் படத்தில் வரும் ரஜினிகாந்த் சண்டை எல்லாம் நன்றாகப் போடக் கூடியவர். ஆனால் பாவம் ஆங்கிலம்தான் தப்புத் தப்பாக பேசுவார். அது தப்பு என்று தெரியும்போது பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அதை ஏற்றுக்கொள்ளும் குழந்தைத்தனமும் ரஜினியிடம் அழகுதான்.

  • அதேபோல் எத்தனை முரட்டுத்தனமான வில்லனையும் அடித்து நொறுக்கும் ரஜினி பாம்பைப் பார்த்து பயப்படும்போது அவரது இன்னசன்ஸ்தான் பெண்களைக் கவர்ந்தது என்பது நிஜமே!

  • தர்மத்தின் தலைவன் படத்தில் வேஷ்டியை மறந்து பேருந்து நிலையம் வரை செல்லும் ரஜினிகாந்த் ஒரு சாப்ளின் மாதிரி. எஸ்.பி.முத்துராமன் படங்களில் கெளபாய் உடையணிந்து துப்பாக்கி வைத்துக்கொண்டு மக்களைக் காப்பாற்றும் ரஜினியை குழந்தைகள் அதிகம் ரசித்திருக்கிறார்கள்.

  • வெங்காயம் உரிக்கும்போது ஏற்படும் கண் எரிச்சலைப் போல் லேசாக வாய்கோணி கண்களை அழுத்தித் துடைக்கும் ரஜினியைப் பார்த்தால் நமக்கும் கண் கலங்குவது உண்டு. 

  • எல்லாவற்றையும் இழந்து கணீரென்ற குரலில் மூச்சடக்கி அசோக்.. என்று அண்ணாமலை படத்தில் ரஜினி பேசும் வசனம் எல்லாம் கிளாசிக்! ஒரு சில படங்களின் தொடக்கத்தில் டைட்டிலின்போது தலைமுடிகளுக்கு, மூக்கு நுனிகளில் மட்டும் வெளிச்சம் பட்டு பாடலுக்கு தலை நிமர்த்தி உதடசைக்கும் ரஜினியை ரசித்திருக்கிறீர்களா!



  • காதலை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ஜானி படத்தில் ரஜினியின் குரலில் இருக்கும் தத்தளிப்பை கவனித்திருக்கிறீர்களா?

  • 'முள்ளும் மலரும்' படத்தில் கடைசியில் தன் தங்கை தன்னிடம் திரும்பி வரும்போது காளியின் முகத்தில் இருக்கும் கர்வத்தை ஒரு முறை திருப்பிப் பாருங்கள்!

  • ஆசை ஆசையாக வளர்த்த மகள் தங்களை விட்டு பிரிந்து சென்ற பின் தன் மனைவியை சமாதானப்படுத்தும் ஒரு தந்தையின் தனிமையை நல்லவனுக்கு நல்லவன் படத்தில் பார்க்கலாம்.




  • படையப்பாவில் கொஞ்சம் பெரிதான சட்டையை பட்டன்களை அவிழ்த்துவிட்டு சற்று நளினத்துடன் நடந்து ரம்யா கிருஷ்ணனிடம் வசனம் பேசும் ரஜினி.

  • மாயநதி பாடலில் ராதிகா ஆப்தே விரிக்கும் போர்வையை கலைத்து போடும் கொஞ்சல்!

  • நல்ல குத்தாட்டம் போடும்போது பாடல்வரிகளுக்கு பொருந்தாமல் தன் போக்கில் அசைந்துகொண்டிருக்கும் ரஜியின் உதட்டை கவனித்திருக்கிறீகளா?

  • ரஜினி படங்களில் வரும் சண்டைக் காட்சிகளுக்கு மட்டுமே ஒரு டிஷும் டிஷும் சவுண்ட் இருக்கிறது தெரியுமா?

  • பாட்சா படத்தில் குரலை உயர்த்தாமல் ஒரு விதமான ஹஸ்கி வாய்ஸில் கோபமாக பேசுவது என இப்படியான இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!


இன்னும் எத்தனையோ விதங்களில் ரஜினியை ரசித்துக் கொண்டே இருக்கலாம்! மேலும் ரசிக்க தலைவர் 170ஐ எதிர்பார்த்து காத்திருப்போம்