தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று நாட்டாமை. 1994ம் ஆண்டு வெளியான இந்த படம் சரத்குமாருக்கு பெரும் புகழையும், ரசிகர்களையும் பெற்றுத் தந்தது. தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருப்பார். 

நாட்டாமையாக ரஜினிகாந்த்:

தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை கண்டு மற்ற மொழியிலும் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டினர். தமிழில் நாட்டாமை படத்தில் சிறிது நேரம் வந்தாலும் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் சரத்குமாரின் தந்தை கதாபாத்திரம். அந்த நாட்டாமை கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் விஜயகுமார் நடித்து அசத்தியிருப்பார். 

இதனால், மற்ற மொழிகளில் படத்தின் நாயகர்களை தேர்வு செய்வதை காட்டிலும் நாட்டாமைக்கான அந்த கவுரவ வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது சவாலாக இருந்தது. அந்த வகையில் நாட்டாமை படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் நாட்டாமை படம் பெத்தராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

பெரும் வரவேற்பு:

இந்த படத்தை ரவிராஜா பினிசெட்டி இயக்கினார். தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான மோகன்பாபு கதாநாயகனாக நடித்தார். விஜயகுமார் வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்று சிந்தித்தபோது, நடிகர் மோகன்பாபுவின் மிக நெருங்கிய நண்பரும், சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்தை அணுகினர். அவரும் மோகன் பாபுவிற்காக ஒப்புக்கொண்டார். 

தனக்கே உரித்தான ஸ்டைலில் சிறிது நேரம் என்றாலும் அந்த நாட்டாமை கதாபாத்திரத்தை அசத்தலாக நடித்து மிரட்டியிருப்பார். அதுவும் சுருட்டு பிடிக்கும் காட்சியில் தனது ஸ்டைலால் மிரட்டியிருப்பார் ரஜினிகாந்த். படம் முழுக்க மோகன்பாபுவிற்கு கிடைத்த கைதட்டலை காட்டிலும், ரஜினிகாந்திற்கு அந்த நாட்டாமை கதாபாத்திரத்திற்கு பெரும் கைதட்டல் கிடைத்தது. தமிழில் கிடைத்தது போலவே தெலுங்கிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. 1995ம் ஆண்டு வெளியான இந்த பெத்தராயுடு படம் 150 நாட்களை கடந்து வெற்றிகரமாக தெலுங்கில் ஓடியது. 

இந்தியிலும் நாட்டாமை:

தெலுங்கில் மட்டுமின்றி இந்தியிலும் 2000ம் ஆண்டு நாட்டாமை படம் ரீமேக் செய்யப்பட்டது. பூலாந்தி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில் அனில் கபூர் கதாநாயகனாக நடித்திருப்பார். இந்த படத்திலும் விஜயகுமார் கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்தை படக்குழு  அணுகியது. இந்தியிலும் மிகப்பெரும் செல்வாக்கு மிகுந்த நடிகராக உலா வந்த ரஜினிகாந்த் இந்த படத்திலும் விஜயகுமார் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். 

கன்னடத்திலும் 2002ம் ஆண்டு நாட்டாமை படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் கன்னட சூப்பர்ஸ்டாராக உலா வந்த விஷ்ணுவர்தன் நடித்திருப்பார். இந்த படத்தில் விஜயகுமார் கதாபாத்திரத்தில் அவரே நடித்திருப்பார்.