இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். 1975ம் ஆண்டு அபூர்வ சகோதரர்கள் என்ற படம் மூலமாக முதன்முதலில் நடிகராக அறிமுகமாகினார். தனது வித்தியாசமான உடல்மொழியாலும், நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

தளபதி:


தொடக்க காலத்தில் வில்லன், குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் ஹீரோவாக உருவெடுத்தார். பைரவி, முள்ளும் மலரும், தப்பு தாளங்கள் என வரிசையாக குடும்ப பாங்கான படங்களில் வித்தியாசமான நடிப்பை காட்டிய ரஜினிகாந்த் பில்லா படம் மூலமாக ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு கமர்ஷியல் சினிமா ரூட்டை முழுக்க முழுக்க கையில் எடுத்து ரஜினிகாந்த் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.


தனது ஸ்டைல், பஞ்ச் டயலாக்கால் சூப்பர்ஸ்டாராக உருவெடுத்த ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்தபோது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தனது ஸ்டைல், பஞ்ச் டயலாக் ஏதும் இல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் தளபதி. 1991ம் ஆண்டு வெளியான இந்த படம் அந்தாண்டு வெளியான படங்களிலே மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாக அமைந்தது.


கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்:


ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, அவரது பிறந்தநாள் கொண்டாட்டமாக தளபதி படம் இன்று திரையரங்கில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. வியாழக்கிழமை நாள் என்றாலும் தளபதி படம் வெளியாகிய திரையரங்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் தளபதி படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






ப்ளாக்பஸ்டர் வெற்றி:


1991ம் ஆண்டு வெளியான தளபதி படம் அப்போதே ரூபாய் 3 கோடிக்கும் மேல் வசூல் குவித்து அசத்தியது. அன்றைய தேதியில் 3 கோடி என்பது மிகப்பெரிய தொகை ஆகும். 1991ம் ஆண்டு தீபாவளி விருந்தாக வந்த தளபதி படத்தில் ரஜினிகாந்துடன் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி நடித்திருப்பார். இவர்கள் இருவரும் நண்பர்களாக அசத்தியிருப்பார்கள்.


இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார். ஜிவி பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு செய்திருப்பார். ரஜினிகாந்த் தம்பியாக அரவிந்த்சுவாமி நடித்திருப்பார். ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, பானுப்பிரியா, சோபனா, கீதா, நாகேஷ், சாருஹாசன், கிட்டி, சார்லி ஆகியோர் நடித்திருந்தனர்.


மகாபாரத கதையை நிகழ்காலத்திற்கு ஏற்றாற்போல மாற்றி மணிரத்னம் எடுத்திருப்பார். கர்ணனைப் போன்று தாயால் கைவிடப்பட்ட மகனாக ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்திருப்பார். ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தளபதி படம் எப்போதும் மிகப்பெரிய விருந்தாகவே தற்போது வரை உள்ளது.