சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  நேற்று ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசிய கருத்துகள், மற்றும் குட்டிக் கதை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.


இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:


”நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார். எனக்கு அந்தக் கதை பிடிச்சிருக்குனு சொன்னேன். பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து 10 நாள்களில் விரிவாக கதை சொல்வதாக கூறினார். 10 நாளைக்குப் பின் பீஸ்ட் ஷூட் முடிஞ்சு வந்து கதை சொன்னார் . கதை அற்புதமாக இருந்தது. ப்ரோமோ ஷூட் செய்து படத்தை அறிவித்தோம். அதன் பின் வெளியான பீஸ்ட் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இதனையடுத்து இயக்குநரை மாற்றுமாறு விநியோகஸ்தர்களிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன.


நாங்கள் அனைவரும் சன் டிவி குழுவுடன் ஒரு சந்திப்பு நடத்தினோம். அப்போது, விமர்சனங்கள் மோசமாக உள்ளது உண்மை தான். ஆனால், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் இல்லை, பாக்ஸ் ஆபிஸில் நன்றாக இருக்கிறது என்று சன் டிவி டீம் என்னிடம் கூறியது. இந்தப் படம் பாட்ஷா மாதிரி இருக்குமானு தெரியல, ஆனா அதுக்குலாம் மேல இருக்கும். நீங்க தான் பாத்துட்டு சொல்லணும்.


முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் போன்ற இயக்குநர்கள் என் கேரியரை உயர்த்தியவர்கள். இப்போது நெல்சனும் இந்தப் பாதையில் இருக்கிறார். நான் முதல் முறை ஹுக்கும் பாடல் வரிகள் பார்த்தபோது தாறுமாறாக இருந்தது. அப்போது, சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை மட்டும் அதிலிருந்து எடுக்க சொன்னேன்.


சூப்பர் ஸ்டார் பட்டம் என்னைக்குமே தொல்லைதான். நான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்க நீண்ட காலத்திற்கு முன்பே கேட்டேன். அப்போது சிலர் ரஜினி பயந்துவிட்டதாக கூறினார்கள். நான் இரண்டு பேருக்கு மட்டுமே பயப்படுகிறேன். ஒன்று கடவுளுக்கு. மற்றொன்று நல்ல மனிதர்களுக்கு. நல்லவங்களோட சாபம் எப்போதும் நம்மை காயப்படுத்தும். நல்லவர்களை நாம் புண்படுத்தக் கூடாது. இதனை தொடர்ந்து காவாலயா பாடல் ஹூட்டிங் பற்றி பேசிய ரஜினிகாந்த், காவாலா படலில் ஜானி மற்றும் தமன்னா  அசத்தியிருக்கிறார்கள்”. என்றார்.


ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை


”பறவைகளில் காகம் எப்போதும் பலருக்கும் தொல்லை கொடுக்கும். ஆனால் பருந்து யாருக்கும் தொல்லை தராது. கழுகை கூட காகம் டிஸ்டர்ப் செய்யும், ஆனால் கழுகு எதுவுமே செய்யாது. அது அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும். காகம் அதற்கு போட்டியாக ஒரு கட்டம் வரை வரும், ஆனால் அதனால் அதிக உயரம் பறக்க முடியாது. நான் காக்கா கழுகுன்னு சொன்ன உடனே.. இவரை தான் சொல்றேன்னு சோசியல் மீடியால சொல்லுவாங்க. குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலைய பாத்துட்டு நேரா போயிட்டே இருக்கனும்”. இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.