'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நடிகை துஷாரா விஜயன். பா. ரஞ்சித் இயக்கத்தில் பாக்ஸிங் வரலாற்றை மையமாக வைத்து நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலையும் குவித்த படம் 'சார்பட்டா பரம்பரை'. 




இப்படத்தில் நடிகர் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற வெயிட்டேஜ் நிறைந்த கதாபாத்திரத்தில் தனது அசத்தலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் அறிமுகமானது 'போதை ஏறி புத்தி மாறி' என்ற திரைப்படத்தில் தான் என்றாலும் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று கொடுத்த படம் 'சார்பட்டா பரம்பரை'. அந்த வெற்றி படத்தை தொடர்ந்து மீண்டும் பா. ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்திலும் ரெனே என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அப்லாஸ் பெற்றார். இப்படி சவாலான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் துஷாரா விஜயன் தற்போது இயக்குநர் வசந்தபாலனின் 'அநீதி' திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் ஜோடியாக நடித்துள்ளார். 



 


மாடலிங் துறையில் இருந்து நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டு இந்த துறைக்கு வந்த துஷாரா விஜயன் ஆரம்ப காலகட்டங்களில் பல அவமானங்களை சந்தித்துள்ளார். இது குறித்து ஒரு முறை துஷாரா விஜயன் மேடையில் பேசியிருந்தார். இயக்குநர் ஒருவரை சந்திக்க சென்றபோது


“நீ சாதாரண ரோல் ஏதாவது இருந்தா பண்ணு, ஹீரோயின் ரோல் எல்லாம் உனக்கு செட்டே ஆகாது” என்றுள்ளர். 'சார்பட்டா பரம்பரை' படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அதற்கு டப்பிங் செய்ய டப்பிங் தியேட்டருக்குச் சென்ற இடத்தில் மீண்டும் அந்த இயக்குநரை சந்தித்துள்ளார். அப்போது அவர், ”இங்க என்ன மா பண்ற? யாருக்காவது வாய்ஸ் கொடுக்க வந்து இருக்கியா?” என கேட்டுள்ளார்.


அதற்கு துஷாரா விஜயன் "இல்ல நான்தான் இந்த படத்தில நடிச்சிருக்கேன். எனக்கு வாய்ஸ் கொடுக்கறதுக்கு தான் வந்து இருக்கேன்" என கெத்தாக கூறியுள்ளார். அந்த இயக்குநர் யார் என்பதை சொல்லிவிட்டால் ஸ்வாரஸ்யம் குறைந்து விடும். அதனால் யோசித்துக்கொண்டே இருங்கள் என சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் கூறியிருந்தார் துஷாரா விஜயன்.   


தோற்றத்தை வைத்து ஒருவரின் திறமையை அறிந்து கொள்ள முடியாது என்பததற்கு உதாரணமாக ஏராளமானோர் தமிழ் சினிமாவில்  ஜொலித்துள்ளனர். அப்படி அவமதிக்கப்பட்ட ஒரு நடிகை இன்று சிறந்த நடிகையாக கொண்டாடப்படுகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரின் திறமை மட்டுமே.