Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 


தமிழ் திரையுலகமே பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ள திரைப்படம் என்றால் அது ரஜினியின் 169வது திரைப்படமான ஜெயிலர் தான். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.


இந்த விழாவில் தர்பார் பட விழாக்களுக்குப் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன் தோன்றி பேசினார். நேற்று இந்த விழா சன் தொலைக்காட்சியில் வெளியான நிலையில், ரஜினியின் இந்தப் பேச்சு விழாவின் ஹைலைட்டாக அமைந்து சுவாராஸ்யம் கூட்டி லைக்ஸ் அள்ளியது. நடிகர் ரஜினிகாந்த் பேசியவை பின்வருமாறு:


2கே கிட்ஸூக்கு தெரியாது...


” 48 ஆண்டுகள் நான் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குநர்கள் தான். நான் பயப்படுவது கடவுளுக்கும் நல்ல மனிதர்களுக்கும்தான். நல்லவர்கள் சாபத்திற்கு ஆளாகக்கூடாது. எதிர்ப்பு வெறுப்பு எல்லாருக்கும் இருக்கும். எனக்கு வந்த எதிர்ப்பும் வெறுப்பும் சுனாமி மாதிரி. இந்த 20’ஸ் கிட்ஸ்க்கு தெரியாது. 70களில் இது போன்ற சமூக வலைதளங்கள் இல்லாததால் எனக்கு வந்த வெறுப்பும் எதிர்ப்பும் யாருக்கும் தெரியவில்லை. அந்த எதிர்ப்பு வெறுப்பில் வந்த நெருப்பில் விளைந்த செடி தான் இந்த ரஜினிகாந்த். 


அப்படி நெருப்பில் வளர்ந்த செடியையைக் காப்பாற்றியது, கடவுளும் எனது உழைப்பும், அதனால் நான் சம்பாதித்த எனது ரசிகர்கள்தான். இவர்கள்தான் ஒரு இரும்புக் கோட்டைபோல் என்னைக் காத்தார்கள். படத்தில் சிகரெட் அடித்துக்கொண்டு, ஸ்டைல் செய்துகொண்டு இருந்தபோது, ஆறில் இருந்து அறுபது வரை, புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் போன்ற படங்கள் வந்தன.


தாய்க்குலங்கள் தியேட்டர் வந்தார்கள்


இதனால் தாய்க்குலங்கள் தியேட்டருக்கு வந்தார்கள். தாய்க்குலம் தியேட்டருக்கு வருகிறார்கள் என்றால், அது கரும்புக் காட்டுக்குள் யானை புகுந்த மாதிரி. இதுமாதிரி படங்கள் வந்தபோது எதிர்ப்பாலும் வெறுப்பாலும் எதுவும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் அந்த நெருப்பு இன்னும் ஆறவில்லை. இன்னும் கூட அந்த புகைச்சல் இருந்துகொண்டுதான் உள்ளது.


இந்த வெறுப்பும் எதிர்ப்பும் எல்லோருக்கும் எல்லா துறையிலும் இருக்கும். இதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், மொழியிலேயே மிகவும் உயர்ந்த மொழி மௌனம். மௌனத்தில் பதில் சொல்லிவிட்டு நம் வேலையைப் பார்க்கச் சென்றுவிடவேண்டும். நான் காகம் - கழுகு பற்றி பேசியதால், ‘ நானே கழுகு எனக் கூறிவிட்டேன், நானே குருவி எனக் கூறிவிட்டேன் என நீங்களாகவே சமூக வலைதளங்களில் எழுதவேண்டாம்.


அர்த்தமாயிந்தா ராஜா...


நான் நடப்பதைச் சொல்கிறேன். இதற்கு வேறு அர்த்தம் தராதீர்கள். நான் இப்படி சொன்ன பிறகும் நீங்கள் எழுத தான் போகிறீர்கள்! குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. இந்த இரண்டும் இல்லாத ஊரும் இல்லை. தமிழ்நாடு என்ன விதி விலக்கா? கிடையாது! நாம் நம்வேலையைப் பார்த்துக்கொண்டு போயிட்டே இருக்க வேண்டும். அர்த்தாமாயிந்தா ராஜா” என பேசினார்.