ரஜினிகாந்த் என்றாலே சூப்பர் ஸ்டார் என்பது இப்போது இருக்கும் 2k கிட்ஸ்க்கு தெரியும். ஆனால் அவர் அபூர்வ ராகங்கள் படத்தில் எண்ட்ரி கொடுத்த நாள் முதல் சினிமாவில் அவர் எடுத்த முயற்சிகள், அவமானங்கள், துயரங்கள் பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. பல தடைகளை தாண்டி சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பிடித்து அதை தற்போது வரை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். 1977 ஆம் ஆண்டு பைரவி படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார் ரஜினி. அதன்பின் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை ஆகிய படங்கள் மூலம் தனது அழுத்தமான நடிப்புத்திறமையை வெளிக்காட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக மாஸ் ஹீரோவாக மாற ஆரம்பித்த ரஜினி, 1980ஆம் ஆண்டில் மட்டும் ஜானி, பொல்லாதவன், முரட்டுக்காளை, பில்லா என பல ஹிட் படங்களை கொடுத்தார். 


அதன்பின்னர், சூப்பர் ஸ்டார் என்றாலே மாஸ். நடிப்பு, நகைச்சுவை, ஸ்டைல், குணச்சித்திரம் என அனைத்து வகையான கதாப்பாத்திரங்களும் ஏற்று நடித்த ரஜினிகாந்த் ஒரு கட்டத்துக்கு மேல் எது செய்தாலும் ஸ்டைல் தான் என்று மாறிப்போனது. அதற்கு காரணம் அவரின் கண்மூடித்தனமான ரசிகர்கள். அவரும் அவரின் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தே ஆக வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். 


முரட்டுக்காளை:


அதில் முக்கியமான ஒரு விஷயம் ரஜினியின் இண்ட்ரோ சாங். முரட்டுக்காளை படத்தில் “பொதுவாக என் மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்” பாடல் ரஜினிக்கு இண்ட்ரோ சாங்காக அமைந்தது. அதையடுத்து அடுத்தடுத்து ரஜினி படத்தில் இண்ட்ரோ சாங் இடம்பெறாமல் இல்லை. அதை ரசிகர்கள் கொண்டாட தவறியதும் இல்லை.  


 



அண்ணாமலை:


1992ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. ஒரு சாதாரண பால்காரர் மிகப்பெரிய தொழிலதிபரான நண்பன் செய்த துரோகத்தால் வெகுண்டெழுந்து அவரையே பின்னுக்கு தள்ளி முன்னேறுவதுதான் கதை. இப்படத்தில் ரஜினிக்கு இண்ட்ரோ சாங்காக அமைந்திருக்கும் “வந்தேண்டா பால்காரன்” பாடல். இப்பாடலில் பசுவையும் மனித வாழ்வையும் ஒப்பிட்டு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கும். 


 



எஜமான்:


தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு வெளிவந்த எஜமான் படத்திலும் ரஜினிகாந்துக்கு இண்ட்ரோ சாங் இருக்கும். ஆனால் இதில் ரஜினி ஆட்டமெல்லாம் போடமாட்டார். தனது நடையிலேயே எஜமான் என்பதை காண்பித்திருப்பார். “எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைப்போம்” என்ற பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது. 


 



 பாட்ஷா.:


மீண்டும் 1995 ஆம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பாட்ஷா. சூப்பர் டூப்பர் ஹிட். படமுழுக்க ஸ்டைலுக்கு பஞ்சமிருக்காது. இதில் இண்ட்ரோ சாங்காக அமைந்தது ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் பாடல். படம் ஆரம்பிக்கும் முதலே ரஜினி எங்கே ரஜினி எங்கே என்ற எதிர்ப்பார்ப்பை எகிர வைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். 


 



முத்து :


அதே தொனிதான் முத்து படத்திலும் இருக்கும். முத்து எங்க? முத்து எங்க? எதிர்ப்பார்ப்பு. அப்போதுதான் “நான் எப்ப வருவேன்; எப்படி வருவேன் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்” என்ற டயலாக் அனைவராலும் கவனிக்கப்பட்டது. இப்படத்தில் இண்ட்ரோ சாங்காக ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் இடம்பெற்றது. மனிதன் என்பவன் ஒன்றுமே இல்லை என்பதை இந்த சாங் எடுத்துரைக்கும். 1995ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இப்படம் வெளியானது.


 



அருணாச்சலம்:


1997 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் சுந்தர் சி இயக்கிய படம் அருணாச்சலம். இப்படத்தில் “அதாண்டா இதாண்டா அருணாசலம் நான் தாண்டா” என்ற பாடல் இண்ட்ரோ சாங்காக இருக்கும். இதில் கடவுளையும் தாயையும் ஒப்பிட்டு பாடல் எழுதப்பட்டிருக்கும். 


 



படையப்பா:


1999 ஆம் ஆண்டு மீண்டும் கே.எஸ் ரவிக்குமாருடன் ரஜினி இணைந்த படம் படையப்பா. இதில் சிவாஜியும் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இதிலும் இண்ட்ரோ சாங் உண்டு. என் பேரு படையப்பா பாடலின் போது அனைவரும் பேக் மாட்ட ஆரம்பித்துவிட்டார்கள். 



அடுத்தடுத்து சந்திரமுகி, சிவாஜி, தர்பார் என ரஜினியின் படங்கள் முழுக்க இண்ட்ரோ சாங்கிற்கு என தனி இடம் உண்டு. ரஜினிக்கு இண்ட்ரோ சாங் என்றால் அதில் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பெரும் பங்கு உண்டு. அவரின் ஸ்டைலான குரல் மூலமே ரஜினி வாழ்ந்திருப்பார். 


ஒருமுறை ரஜினிக்கு பாடல் பாடுவது குறித்து எஸ்பி பாலசுப்ரமணியத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எஸ்.பி.பி, “நிறைய பேருக்கு பாடியிருக்கிறேன். ஆனால் ரஜினிக்கு என்று பாடும்போது சற்று இழுத்து பாடினால்தான் அவருக்கேற்ற ஸ்டைல் அந்த பாட்டில் இருக்கும். அதில் நுணுக்கம் இருக்கிறது” என்று தெரிவித்தார். 


சூப்பர் ஸ்டார் ஆண பிறகு மட்டும்தான் ரஜினிக்கு இண்ட்ரோ சாங் என்று எண்ண வேண்டாம். அடைமொழியே இல்லாத காலத்தில் கூட ரஜினிக்கு இண்ட்ரோ சாங் வைத்தார்கள். ஆம்.. அதுவும் நடிகர் திலகம் படத்தில் என்றால் நம்ப முடிகிறதா... ஓய்ந்து போன சிவாஜி காலத்தில் இல்லை. சிவாஜி மாஸ் ஹீரோவாக இருக்கும் காலத்திலேயே ரஜினிக்கு இண்ட்ரோ சாங் இருந்தது. 



1979 ஆம் ஆண்டு ரஜினிக்கு அடைமொழியே இல்லை. வெறும் ரஜினிகாந்த் தான். அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளிவந்த படம்  “நான் வாழவைப்பேன்” திரைப்படம். இப்படத்தில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் டைட்டில் கார்டில் கூட வெறும் ரஜினிகாந்த் என்றே அவரது பெயர் இடம்பெற்றிருக்கும். ஆனால் இந்த படத்தில் ரஜினிக்கு  “ஆகாயம் மேலெ பூலோகம் கீழே” என்ற இண்ட்ரோ சாங் இடம்பெற்றிருக்கும்.