விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக கிராமிய பாடல்களை முன்னிறுத்தி பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர். கிராமத்து தெம்மாங்கு பாடல்கள் பாடுவதில் கில்லாடியான இவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு பல வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இசைக்கச்சேரியில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் பாடகி ராஜலட்சுமி தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக ராஜலட்சுமி , செந்தில் தம்பதிகளுக்கு பரீட்சியமான ஒரு நபர் , யூடியூப் கணக்கு ஒன்று தொடங்கலாம் அதனை நானே செய்து தருகிறேன் என அனுகியுள்ளார். அக்கா என அழைத்த ஒரே காரணத்தால், நம்மை ஏமாற்ற மாட்டார் என நினைத்தாராம் ராஜலட்சுமி. ஆரம்பத்தில் அது குறித்த புரிதல் தங்களுக்கு இல்லை என கூறும் ராஜலட்சுமி , அந்த நபருக்கு மாத சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து , அரிதாரம் என்னும் யூடியூப் சேனலை தொடங்கியதாக கூறுகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த காலக்கட்டம் என்பதால் ,தம்பதிகள் பிஸியாக இருந்துள்ளனர் . அப்போது மாதம் அதிகபட்சமாக 4 வீடியோக்கள் மட்டுமே பதிவு செய்ய முடிந்ததாம். வீடியோக்கள் எடுப்பது, அதனை எடிட் செய்வது போன்ற வேலைகளை , அந்த நபர் செய்யமாட்டாராம். நிர்வாக பொறுப்பை மட்டுமே அவர் வகித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தங்களுக்கு மேனேஜராக , யூடியூபில் பணிபுரிந்த ஒரு நபரை பணியமர்த்தியுள்ளனர் செந்தில்- ராஜலட்சுமி தம்பதிகள். அவருக்கு அரிதாரம் யூடியூப் சேனல் குறித்து தெரிய வரவே, இதில் நிறைய தவறாகவுள்ளது. இந்த சேனலை நிர்வகிக்க மட்டும் 15 ஆயிரம் என்பது அதிகமான தொகை என நிலைமையை எடுத்துக்கூறினாராம். உடனே ராஜலட்சுமி யூடியூப் நிர்வாகி தம்பியிடம், “நீங்க இதுவரை செய்த உதவிக்கு நன்றி, சேனலை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்“ என கூறினாராம்.
இந்த சம்பவம் குறித்து பகிர்ந்துக்கொண்ட அவர் யூடியூப் பக்கம் தொடங்க வேண்டுமானால் , தனி நபரை நாடுவதை விட அதற்காக செயல்படும் நிறுவனங்களை நாடுங்கல். மேலும் என்னதான் தெரிந்த நபராக இருந்தாலும் , அவர் யூடியூப் பக்கத்தை தொடங்கி தருவதாக இருந்தால் அவருடன் ஒப்பந்தம் செய்துக்கொள்வது அவசியம் என தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.