தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டு விட்டு சூப்பர் சிங்கர் போட்டிகளை விஜய் டிவி நடத்தி வருகிறது. 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் போட்டி 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.


இதில் பாடிய சீனியர்கள், ஜூனியர்கள் பலரும் சினிமா பாடகர்களாக உயர்ந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி சர்ச்சைகளுக்கும் பிரபலம். ஒவ்வொரு ஆண்டும் எலிமினேஷன், வெற்றியாளர் அறிவிப்பு தொடர்பாக சர்ச்சைகள் எழுவது வழக்கம். அதுபோல் புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது.


தற்போது சூப்பர் சிங்கரின் 8 வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனுக்கு அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.சரண் மற்றும் பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்த நிலையில், ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் சில தினங்களுக்கு சூப்பர் சிங்கரில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு உள்ளார். அபிலாஷ், ஐயனார், மானசி, முத்துசிற்பி, அனு ஆனந்த், பரத், ஆதித்யா ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இறுதிப்போட்டிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஸ்ரீதர் வெளியேற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் பலரும் நடுவர்களைக் கடுமையாகச் சாடி பதிவிட்டு வந்தனர்.



விமர்சனங்கள் எல்லை மீறி சென்றதால் பொறுமை இழந்த நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், இனி சூப்பர் சிங்கர் 8 தொடர்பாக எதையும் பதிவிட போவதில்லை எனவும், வெறுப்பு பதிவுகளை தன்னால் தாங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதுவரை மக்கள் காட்டிய அன்புக்கு நன்றி தெரிவித்துள்ள பென்னி தயால், நானும் ஒரு மனிதன் தான். அடுத்த சீஸனில் உங்களைப் பார்க்க மாட்டேன் என குறிப்பிட்டு உள்ளார்.


பென்னி தயாலின் இப்பதிவு விவாதப் பொருளான நிலையில், அவருக்கு சூப்பர் சிங்கர் 8 போட்டியாளர்களில் ஒருவரான குரு ஆதரவு தெரிவித்து உள்ளார்.


இது குறித்து குரு தனது வெளியிட்டு உள்ள கருத்தில், இதுபோன்று குரைக்கும் நாய்களை கண்டு கவலைப்பட வேண்டாம்; அவர்கள் குரைத்துக் கொண்டே இருக்கட்டும். அவர்களால் அதை மட்டும்தான் செய்ய முடியும். உங்களை நாங்கள் நேசிக்கிறோம். எப்போதும் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என கூறி உள்ளார். குருவின் இந்த கமெண்டும் வைரலாகி வருகிறது.


கேரளாவை சேர்ந்த பென்னி தயால், 2002-ம் ஆண்டு பாபா படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் பாடகராக அறிமுகம் செய்யப்பட்டார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், குஜராத்தி, மராத்தி மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.