சின்னத்திரை ரசிகர்களுக்கு விஜய் டிவி மீது அப்படி ஒரு மோகம். அதற்கு காரணம் அதில் ஒளிபரப்பாகவும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள். அப்படி மக்களின் மனங்களில் பல ஆண்டுகாலமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என மாறி மாறி ஒளிபரப்பாகி வருகிறது.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் இன்று  முன்னணி பாடகர்களாக பிரபலமாகியுள்ளனர். உலகளவில் பிரபலமான இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 9 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியினை அனைவரின் ஃபேவரைட் தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே  நகைச்சுவையுடன் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.


 



சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று டிஜே பிளாக். அவரின் டைமிங் சென்ஸ் அனைவரையும் கவரும் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் அவர் செய்து வரும் அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. இந்த சீசன் தொடங்கியதில் இருந்து போட்டியாளர் ஒருவருடன் காதல் என அவர் பின்னணியில் பாடல்களை பிளே செய்து ஒட்டுமொத்த நிகழ்ச்சியையே வேற லெவலில் கொண்டு சென்று வருகிறார். 


சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளரான பூஜா மீது தன் காதல் வலையை பாடல்கள் மூலம் வீசி வருகிறார் டிஜே பிளாக். அந்த வகையில் இந்த வாரம் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர் பூஜாவின் அம்மா மற்றும் குடும்பத்தார். பூஜாவின் அம்மா மேடையில் ஏறி "சூப்பர் சிங்கர் பூஜா என கூகுளில் போட்டாலே டிஜே பிளாக் பூஜா அப்படினு தான் வருது. அதுல எனக்கு கொஞ்சம் மனவருத்தம் இருக்கு. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லையா. அவ ஒரு பெண் பிள்ளை எல்லாத்தையும் மனசுல வைச்சுக்கணும் இல்லையா" என மேடைக்கு வந்த டிஜே பிளாக்கிடம் கோபமாக கேட்கிறார் பூஜாவின் அம்மா.


எல்லாருக்கும் போடுற மாதிரி தான் போடுறேன் என டிஜே பிளாக் சொன்னாலும் ஆனால் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என கடுமையாக சொல்கிறார் பூஜாவின் அம்மா. இந்த வாரத்திற்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ப்ரோமோவில் டிஜே பிளாக்கை வெளுத்து வாங்குகிறார் பூஜாவின் அம்மா. விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள இந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. இது வெறும் பிராங்கா அல்லது டிஜே ப்ளாக்கை நிஜமாகவே கழுவி ஊற்றினார்களா என்பதை ஞாயிற்றுக்கிழமை வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.