சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 11 ஆவது சீசன் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பின்னணி பாடகி அனுராதா ஶ்ரீராம் , இசையமைப்பாளர் தமன் , பாடகர் உன்னி கிருஷ்ணன் , இயக்குநர் மிஷ்கின்ஆகிய நான்கு பேர் இந்த சீசனில் நடுவர்களாக கலந்துகொண்டு வருகிறார்கள். கொங்கு தமிழ் , டெல்டா தமிழ் , சென்னை தமிழ் , எங்கும் தமிழ் என பிராந்திய வாரியாக நடுவர்களும் அவர்களின் கீழ் போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு வாரவாரம் சுவாரஸ்யமான சுற்றுகள் நடந்து வருகின்றன. இதுவரை 11 எபிசோட்கள் கடந்துள்ளன. கடைசியாக ஒளிபரப்பான எபிசோட்டில் மறைந்த பாடலாசிரியரை நினைவுகூறும் வகையில் அவர் எழுதிய பாடல்களை போட்டியாளர்கள் பாடினர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  இந்த நிகழ்வில் இயக்குநர் மிஸ்கினின் செயல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது

கவனமீர்க்கும் போட்டியாளர் திஷாதனா

இந்த சீசனில் பலரது கவனத்தை ஈர்த்த போட்டியாளர் இலங்கை தமிழரான திஷாதனா. இவரது பெற்றோர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்து  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுரில் அகதிகள் முகாமில்  கடந்த 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். திஷாதனாவின் தந்தை செண்ட்ரிங் வேலை செய்பவர். மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பது திஷாதனாவின் ஆசை.  ஆனால் தனது படிப்பு செலவுகளை தனது தந்தையால் சமாளிக்க முடியாது என்பதால் பிசியோதெரபி படித்து வருகிறார். 

கல்வி செலவுக்கு பொறுப்பேற்ற மிஷ்கின் 

கடந்த வார சுற்றில் பானாகாத்தாடி படத்தில் நா முத்துகுமார் எழுதிய 'என் நெஞ்சில் ' பாடலை திஷாதனா பாடினார். இந்த பாடலை அவர் பாடி முடித்ததும் இயக்குநர் மிஷ்கின் திஷாதனாவின் ஆண்டுக்கான கல்லூரி கட்டணத்தை தானே கட்டுவதாக கூறினார். மேலும் திஷாதனாவின் மேற்படிப்பிற்கான செலவுகளையும் அவரே பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறினார். மேலும் தனது கடிகாரத்தை கொடுத்து அதை திஷாதனாவின் தந்தையின் கையில் கட்டிவிட சொன்னார்.  மிஷ்கினின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.