மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கி கௌரவிக்கிறது கர்நாடக அரசு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் இந்த விழாவில் கலந்து கொண்டு நடிகர் புனீத் ராஜ்குமார் குடும்பத்திற்கு விருது வழங்கி  கௌரவித்தனர்.



முதலாம் ஆண்டு நினைவு :
 
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் புனீத் ராஜ்குமார். ரசிகர்கள் இவரை பவர் ஸ்டார் என கொண்டாடி வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரை கௌரவிக்கும் விதமாக கன்னட ராஜ்யோத்சவா தினமான இன்று அவரின் முதலாம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கி  கௌரவித்தது.


 



 
சிறப்பு அழைப்பு :


மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கி கௌரவிக்கிறது கர்நாடக அரசு. இந்த விழா இன்று மாலை கர்நாடக மாநிலத்தில் உள்ள விதான் சவுதாவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பின் பேரில் இன்று மதியம் பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினர் சூப்பர் ஸ்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. 


 






 


புனீத் ராஜ்குமார் குடும்பத்திற்கு விருது :


இன்று மாலை நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் கலந்து கொண்டு மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியிடம் கர்நாடக ரத்னா விருதை வழங்கி கௌரவித்தனர். 


 






 


புனீத் குறித்த சூப்பர் ஸ்டார் பேசியது :


இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர், நடிகர் புனீத் ராஜ்குமாரை பற்றி கன்னடத்தில் பேசியது அங்கு கூடியிருந்த அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. கொட்டும் மழையை சற்றும் பொருட்படுத்தாமல் பேச துவங்கிய சூப்பர் ஸ்டாருக்கு விசில்களும் கைதட்டலும் பறந்தன. 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில் " அனைவருக்கும் இனிய கன்னட ராஜ்யோத்சவா வாழ்த்துக்கள். புனீத் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கில் ஏராளமான மக்கள் கூடியதற்கு முக்கியமான காரணம் அவர் நடிகர் என்பதால் அல்ல. அவர் ஒரு சிறந்த மனிதாபிமானமுள்ள மனிதர் என்பதற்காகவே. கடவுளின் குழந்தையான புனீத் ராஜ்குமாரின் ஆளுமை திறன் அபாரமானது. அவர் நடித்த முதல் திரைப்படமான 'அப்பு' திரைப்படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே அதை நான் பார்த்தேன். அன்றே அவரின் தந்தை கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரிடம் இப்படம் நிச்சயமாக ஒரு வெற்றிப்படமாக 100 நாட்கள் ஓடும் என்றேன். நான் சொன்னது போலவே அப்படம் ஒரு சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது" என புனீத் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்தார். மேலும் அவர் பேசுகையில் "புனீத் மரண செய்தி எனக்கு மூன்று தினங்களுக்கு பிறகே தெரிய வந்தது. நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் யாரும் இந்த செய்தியை என்னிடம் கூறவில்லை" என மிகவும் உருக்கமாக தெரிவித்தார். இவ்வாறு மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் குறித்து தனது நினைவுகளை மேடையில் பகிர்ந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.