Raayan Release Date: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் திரைப்படம், வரும் ஜுலை 26ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


ராயன் வெளியீட்டு தேதி அறிவிப்பு:


படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதோடு, ராயன் படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை, அவரே எழுதி இயக்கியுள்ளார். பவர் பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில், வரும் ஜுலை 26ம் தேதி ராயன் திரைப்படம் வெளியாகும் என சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. முன்னதாக இப்படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 ஃபர்ஸ்ட் காபி அடிப்படையில் ராயன் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக தனுஷ் செய்து எடுத்து கொடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, எடிட்டிங் என அனைத்து பணிகளும் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆனால், தேர்தல் காரணமாக அப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருப்பது,  தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.






வட சென்னை கதைக்களம்


தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷண், துஷாரா விஜயன், அபரணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.   வட சென்னையில் வசிக்கும் மூன்று சகோதரர்கள், கேங்ஸ்டர் கதைக்களம் என இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


கலவையான வரவேற்பு:


முன்னதாக இப்படத்தின் முதல் பாடலான அடங்காத அசுரன் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து,  ராயன் படத்தின் இரண்டாவது பாடலான வாட்டர் பாக்கெட் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் - பாடகி ஸ்வேதா மோகன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். சந்தீப் கிஷண் - அபர்ணா பாலமுரளி ஜோடியின் காதல் பாடலாக அந்தப் பாடல் வெளியாகி,  தனுஷ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா ஆகியோர் குடும்பமாக இணைந்திருக்கும் காட்சிகளும் அப்பாடலில் இடம்பெற்றுள்ளன.