கருடன்


துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கருடன் படம் கடந்த மே 31 ஆம் தேதி வெளியானது. சசிகுமார் , உன்னி முகுந்தன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விடுதலை படத்தைத் தொடர்ந்து சூரி இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். கருடன் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை குவித்து வருகிறது. இப்படியான நிலையில் நடிகர் சூரி இன்று தனது சொந்த ஊரான மதுரை கோபுரம் சினிமாஸில் ரசிகர்களுடன் கருடன் படத்தைப் பார்வையிட்டார். படத்தைப் பார்த்த பின் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.


தொடர்ந்து நல்ல கதைகளை கொடுப்பேன் 


பத்திரிகையாளர்களிடம் பேசிய சூரி “ நல்ல படங்களை மக்கள் தலை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என்பதை இப்போது நேரில் பார்க்கிறேன். பெண்கள் மற்றும் குழந்தைகள் கருடன் படத்திற்கு நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளார்கள். தொடர்ந்து மக்களுக்கு நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பேன்” என்று சூரி தெரிவித்துள்ளார்.


இனிமேல் காமெடியனாக நடிப்பாரா சூரி






விடுதலை  தற்போது கருடன் என அடுத்தடுத்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இனிமேல் சூரி மீண்டும் காமெடியனாக நடிப்பாரா என்கிற கேள்வி பரவலாக கேட்கப் படுகிறது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனக்கு இனிமேல் காமெடியனாக நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றும் நாயகனாக அடுத்தடுத்து நடிக்க இருப்பதாக சூரி தெரிவித்திருந்தார். இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த கேள்விக்கு பதிலளித்த சூரி  “ நான் எப்போதும் நாயகனாக இருக்க ஆசைப்படுகிறேன். காமெடி கேரக்டரில் நடிக்க இதுவரை யாரும் என்னிடம் கேட்கவில்லை. அப்படி வாய்ப்பு வந்தால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். நாயகனாக நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் இதே பாதையில் போகலாம் என்று இருக்கிறேன்” என்று சூரி தெரிவித்துள்ளார்.


விடுதலை 2


சூரி நடிப்பில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிபார்த்து வரும் படம் விடுதலை 2. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விடுதலை 2 படம் விரைவில் வெளியாகும் என சூரி தெரிவித்துள்ளார். விடுதலை 2 தவிர்த்து பி.எஸ் வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார் சூரி. இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.