தன் மீதான பண மோசடி வழக்கின் எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி நடிகை சன்னி லியோன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 


கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆபாச படங்களில் நடித்த அவர் அதிலிருந்து விலகி தற்போது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். இதனிடையே இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் சன்னி லியோன் அவ்வப்போது  தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். 






தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான  ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய அவர் தற்போது VAU மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோ  தயாரிப்பில் ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஓ மை கோஸ்ட்  முழு நேர கதாநாயகியாக மாறியுள்ளார். இதனிடையே கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சுமுகமது என்பவர்  சன்னி லியோன் மீது பண மோசடி புகாரை அளித்தார்.


வழக்கின் விவரம் 


அதில் 2018 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் மேடை நிகழ்ச்சிக்காக ஒரு நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளை அவர் மீறியதாகவும்,  இதற்காக முன்பணமாக ரூ.29 லட்சம் பெற்றுக்கொண்ட பின் அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதையடுத்து கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவனந்தபுரத்தில் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்த சன்னி லியோனிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் பல முறை ஒத்திவைத்த நிலையில் எதுவும் நடக்கவில்லை என கூறி 2021 ஆம் ஆண்டு இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இதனையடுத்து அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டது.


முதலில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி நிகழ்ச்சி நடத்துவதாக கூறி, பின் வானிலை மற்றும் வெள்ளம் ஆகியவற்றை காரணம் காட்டி மே 11, மே 28 ஆகிய தேதிக்கு மாற்றப்பட்டது. பின்னர் கேரளாவில் இருந்து பஹ்ரைனில் நிகழ்ச்சி மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னால் பேசப்பட்ட தொகை எனக்கு வழங்கப்படவில்லை. அதனால் அந்நிகழ்ச்சி நடக்கவில்லை


இந்நிலையில் தான் பண மோசடி வழக்கின் எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி நடிகை சன்னி லியோன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அவரது மனுவில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் வழக்கை நீண்ட காலமாக இழுத்து விசாரணை என்று அழைக்கப்பட்டதால் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்தித்ததாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.