கன்னியாகுமரி அருகே ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து தினம்தோறும் நாகர்கோவில் வழியாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் காந்திதாம் சந்திப்பில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயில் (எண்: 20924) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் முதல் நாள் அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.50 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். திருவனந்தபுரம் வழியாக தமிழ்நாட்டிற்குள் நாகர்கோவில் வந்து பின்னர் இந்த ரயில் திருநெல்வேலிக்கு வந்து செல்கிறது. வாரம் ஒருமுறை இந்த ரயிலானது இயக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ரயில் நேற்று முன்தினம் வழக்கம்போல புறப்பட்டு நேற்று இரவு நாகர்கோவில் வந்தடைந்தது.பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்டது. அந்த ரயில் பார்வதி புரம் அருகே வந்த போது திடீரென ரயில் எதோ ஒன்றின் மீது பயங்கர சத்தத்துடன் மோதுவது போன்று இருந்துள்ளது. இதனால் ரயிலை நிறுத்திய லோகோ பைலட், இறங்கி சென்று பார்த்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் கற்கள், இறந்த மாட்டின் மண்டை ஓடு உள்ளிட்டவை இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பார்வதிபுரம் ரயில்வே கிராசிங்கிற்காக இருக்கும் கேட் கீப்பரிடம் விவரத்தை சொல்லி எச்சரித்துள்ளார். உடனடியான அவர் சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கும், ரயில்வே அதிகாரிக்கும் தகவலை கூறியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தையும் ஆய்வு செய்தனர்.
இதில் ரயில் வந்து செல்வதற்கு சில நிமிடங்கள் முன்பு சிலர் இருசக்கர வாகனத்தில் அந்த பக்கம் வந்ததாக கேட் கீப்பர் தெரிவித்துள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தொடரும் அசம்பாவிதங்கள்
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ரயில்களை நோக்கி பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. தண்டவாளங்களில் கற்கள், சிலாப்புகள், லாரி டயர்கள் என அனைத்தையும் வைத்து ரயில்களை கவிழ்க்க சதி செய்வது, ஓடும் ரயில்களில் கல்லெறிவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்தாலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.