வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் மூக்குத்தி அம்மன் 2. நகைச்சுவை , பக்தி கலந்து ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். படத்தின் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றி இந்த வீடியோவில் படக்குழுவினர் பகிர்ந்துள்ளார்கள்.
மூக்குத்தி அம்மன் 2
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து கடந்த 2020 ஆம் ஆண்டு மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்டமாக இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. சுந்தர் சி இந்த பாகத்தை இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். நயன்தாரா , ரெஜினா கசாண்ட்ரா , குஷ்பு , மீனா , ஊர்வஷி , யோகி பாபு , சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்
படப்பிடிப்பை சுற்றி சர்ச்சை
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் பிரம்மாண்டமாக சென்னையில் துவங்கியது. இதனைத் தொடர்ந்து பெரும்பாலான படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. மூக்குத்தி அம்மன் படத்தின் பூஜையின் போது நடிகை நயன்தாரா மற்றும் மீனா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது.
படத்தில் இருந்து விலகிய மீனா
மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி ஊர்வசி , யோகி பாபு மற்றும் பிற கலைஞர்கள் பகிர்ந்துள்ளார்கள். கிட்டதட்ட 6 மாதம் 2000 தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து கடுமையாக இந்த படத்திற்காக உழைத்துள்ளதாக சுந்தர் சி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வீடியோவில் நடிகை மீனா இல்லாதது ரசிகர்களுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது . படத்தின் பூஜையின் போது மீனா இடம்பெற்றிருந்தார். ஆனால் தற்போது படப்பிடிப்பு நிறைவின் போது அவரை காணாமே என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். நயன்தாராவுடனான சர்ச்சையின் காரணமாக தான் மீனா இப்படத்தில் இருந்து விலகினாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது