சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்களின் சுமையைக் குறைக்கவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் பல அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
தேர்வு அட்டவணை
2026ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 10 அன்றும், 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 9 அன்றும் முடிகின்றன. நாடு முழுவதும் சுமார் 45 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.
இரட்டைப் பொதுத்தேர்வு முறை (Twin Board Exams)
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 'இரட்டைப் பொதுத்தேர்வு' முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாணவர் முதல் தேர்வில் தோல்வியடைந்தாலோ அல்லது குறிப்பிட்ட பாடங்களில் மதிப்பெண்களை உயர்த்த விரும்பினாலோ, இரண்டாவது தேர்வில் பங்கேற்கலாம். இது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, ஒரு கல்வியாண்டு வீணாவதைத் தவிர்க்கவும். உதவும்.
பாடவாரியான மாற்றங்கள்
10ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் வினாத்தாள்கள் இனி தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
- அறிவியல்: உயிரியல், வேதியியல், இயற்பியல் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
- சமூக அறிவியல்: வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் என நான்கு பிரிவுகளாக இருக்கும். இது மதிப்பீட்டு முறையை எளிதாக்க உதவும்.
புதிய வினாத்தாள் அமைப்பு
2026ஆம் ஆண்டு தேர்வில் 50 சதவீதக் கேள்விகள் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் பாடத்தைப் புரிந்து பயன்படுத்தும் திறனை சோதிக்கும் வகையில் இருக்கும். 20 சதவீத கேள்விகள் பலவுள் தெரிவு வினாக்களாகவும், மீதமுள்ள 30 சதவீத கேள்விகள் சிறு மற்றும் பெரு வினாக்களாகவும் அமையும். மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, புரிதலுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதே இதன் நோக்கமாகும்.
வருகைப்பதிவு மற்றும் அக மதிப்பீடு
மாணவர்கள் தேர்வெழுதத் தகுதி பெற 75% வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1, 2026 முதல் தொடங்கும் செய்முறைத் தேர்வுகள் மற்றும் அக மதிப்பீடுகளில் (Internal Assessment) பங்கேற்பது அவசியம். இதில் பங்கேற்காத மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் மாணவர்களின் எதிர்காலப் போட்டித் தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சிபிஎஸ்இ தெளிவுபடத் தெரிவித்துள்ளது.