சுனைனா நடிப்பில் உருவாகியிருக்கும் ரெஜினா திரைப்படத்தின் டீஸர் வெளியாகி பரவலாக கவனிக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோயினான  உருவாவார் என எதிர்பார்க்கப்பட்டவர் சுனைனா.


ஆனால் அவரது கரீயர் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ரெஜினா படத்தின் டீஸர் சுனைனாவின் கரியரில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


லத்தி படத்தைத் தொடர்ந்து சுனைனா நடித்திருக்கும் படம் ரெஜினா.டொமின் டி சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பு மலையாளத்தில் பைப்பின் சுவத்திலே பிராணாயம், ஸ்டார் ஆகியத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். சதிஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரிது மந்திரா, நிவாஸ் அதிதன், தீனா, அனந்த்  நாக் விவேக் பிரசன்னா பவா செல்லத்துரை ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சதீஷ் நாராயணன் தயாரித்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை வெளியிடும் ரெஜினா படத்தின் டீஸர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


காதலில் விழுந்தேன்  படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சுனைனா. முதல்  படத்திலேயே தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, நீர்ப்பறவை ஆகியப் படங்களில் நடித்தாலும் சுனைனா தமிழ் சினிமாவில் பெரிய உயரத்திற்கு செல்லாதது ஆச்சரியம்தான். இடைக்காலத்தில் சமர், தெறி ஆகியப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார் சுனைனா. வெகு நாட்களுக்குப்பின் சுனைனாவை திரையில் பார்க்க முடிந்தது என்றால் ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி படத்தில்தான். இந்த படத்தில் சுமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்த சுனைனா மீண்டும் என்ட்ரி கொடுத்தார். இதற்குப்பின் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கபட்டது. அனால் வெகு சில படங்களிலேயே அவரைக் காணமுடிந்தது. கடந்த ஆண்டு வெளியான லத்தி திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.


தற்போது முதல் முறையாக ரெஜினா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை சுனைனாவை க்யூட்டாக பார்த்து ரசித்து வந்த அவரது ரசிகர்கள்  ரெஜினா படத்தில் வேறொரு ரூபத்தில் பார்க்கலாம் என எதிர்பார்க்கலாம்


ரெஜினா திரைப்படம் ஒரு க்ரைம் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சுனைனா இதுவரை நாம் பார்த்திராத அளவிற்கு புதிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. ஸ்டைலாக புகைபிடிக்கும் சுனைனாவில் தொடங்கி கொலை செய்யும் சுனைனா வரை இந்தப் படத்தில் எதிர்பார்க்கலாம். க்ரைம் த்ரில்லர்களில் இருப்பதுபோல விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பல்வேறு ட்விஸ்ட்கள் என அத்தனையும் இருப்பதை டீஸரில் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.