சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களின் நேரங்கள் மாற்றப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீரியல்களின் தனி ரசிகர்கள்


சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சீரியல்களுக்கு வயது வித்தியாசமில்லாமல் ரசிகர்கள் இருப்பதால் சேனல் நிறுவனங்கள் ஒரே கதையை பல்வேறு கோணங்களில் பல சீரியல்களாக காட்சிப்படுத்தி வருவதை பார்த்திருக்கலாம். மறுஒளிபரப்பு செய்தால் கூட டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்கும் அளவுக்கு சீரியல் ரசிகர்கள் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு காலை 8.30 மணி முதல் இரவு 11 மணி வரை குறிப்பிட்ட கால இடைவெளியில், வாரத்தில் 7 நாட்கள் கூட சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 


லட்சுமி சீரியல் 


தமிழ் மொழியை பொறுத்தவரை சீரியல்களை ஒளிபரப்பும் சேனல்களின் வரிசையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவி என அடுத்தடுத்து உள்ளது. ஒவ்வொரு வாரம் சீரியல்களை விறுவிறுப்பாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்கவும் முயற்சித்து வருகின்றது. அதேசமயம் ஒவ்வொரு மாதமும் புது புது சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் “லட்சுமி” என்ற சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. 


இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரையின் முக்கிய நபருமான சஞ்சீவ் நடிக்கிறார். ஹீரோயினாக தென்றல் சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஸ்ருதி நடிக்கிறார். ஏற்கனவே சன் டிவியில் சிங்கப்பெண்ணே, சுந்தரி, எதிர்நீச்சல், கயல், இனியா, வானத்தைப்போல உள்ளிட்ட சீரியல்கள் விறுவிறுப்பாகவும், டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தைப் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் சில தினங்கள் முன்பு லட்சுமி சீரியல் ப்ரோமோ ஒளிபரப்பானது. 


மாமியார், மருமகள் இடையே நடக்கும் பிரச்சினை, பாசம் குறித்த கதையை அடிப்படையாக கொண்ட சீரியலாக லட்சுமி இருக்கும் என ரசிகர்கள் கணித்துள்ளனர். இந்த சீரியல் ப்ரோமோவை பார்த்த பலரும் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் ஆன கோலங்கள் சீரியலின் இரண்டாம் பாகமா? என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சீரியல் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்து வருகிறது. ஏற்கனவே வானத்தைப்போல சீரியலில் நடித்து வரும் சஞ்சீவ், கதையின் நாயகனாக லட்சுமி சீரியலில் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


மாறும் சீரியல் நேரம் 


இந்நிலையில் லட்சுமி சீரியல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதே நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் 9.30 மணிக்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களாகவே இந்த சீரியல் சற்று பின்னடைவை சந்தித்து வந்தது. ஆனால் தற்போது கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டும் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என சொல்லப்படுகிறது. 


ஒருவேளை சீரியல் நேர  மாற்றம் நடைபெற்றால் பிற சீரியல்களின் நேரங்களும் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்து மாறுபடலாம் என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.