தமிழ்நாட்டில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். 


தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்தடுத்து நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மொழிப்பாடத்துடன் தொடங்கியது. இன்று தொடங்கிய தேர்வு 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 3,89,736 மாணவர்கள், 4,30,471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.


வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பாக கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்களை பிடிக்க 3,200 பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தேர்வறைக்குள் மாணவர்கள் செல்போன், மின்சாதானங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.