சன் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல்களான வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி, செவ்வந்தி போன்ற சீரியல்களை இயக்கியதன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் ஓ.என். ரத்னம். குடும்ப கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இவரின் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெரும். 


பிரபல சீரியல் இயக்குனர்:


இயக்குநர் ஓ.என். ரத்னம் காதலித்து பல எதிர்ப்புகளையும் மீறி போராடி பெற்றோரின் சம்மதத்துடன் பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சுமார் பத்து ஆண்டுகள் கடந்த இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்குமே பொள்ளாச்சியில் ஒரு கிராமம் தான் சொந்த ஊர். பள்ளி விடுமுறைகாக மகன்கள் இருவரும் பொள்ளாச்சியில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். 


 



கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் :


கணவன் மனைவி மட்டும் தனியாக சென்னையில் இருந்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று இரவு ரத்னம் - பிரியா தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவருக்கும் இடையே இப்படி சண்டை சச்சரவு ஏற்படுவது உண்டு என கூறப்படுகிறது. கடந்த பத்து நாட்களாக பொள்ளாச்சியில் இருந்த மகன்கள் இன்று காலை தான் சென்னை திரும்பியுள்ளனர்.


அவர்களை அழைப்பதற்காக ரத்னம் பேருந்து நிலையம் சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த பிரியா மனமுடைந்து தூக்கில் தொங்கியுள்ளார். வீட்டிற்கு திரும்பிய ரத்தினம் மற்றும் அவரது குழந்தைகள் தூக்கில் தொங்கிய பிரியாவை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்கொலை பற்றி தெரிய வர பிரியாவை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் பிரியா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  


சோகத்தில் நட்பு வட்டாரம் :


ஓ.என்.ரத்னத்தின் நட்பு வட்டாரத்தில் விசாரித்ததில் ' இருவரும் காதலித்து வந்தது பெற்றோர்களுக்கு தெரிய வர கடும் எதிர்ப்புகளையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். பிரியா அவர்களின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என அடம்பிடித்து ரத்தினத்தை திருமணம் செய்துகொண்டார். அப்படி போராடி கல்யாணம் செய்து கொண்டவர் இன்று சிறு சிறு பிரச்சனைகளுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை' என கூறியுள்ளனர். பிரியாவின் இந்த தற்கொலை முடிவு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)