சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 1 வெற்றிகரமாக முடிவடைந்தது. 14 போட்டியாளர்களுடன் 30 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் நடுவர்களாக ஹரிஷ், ஆர்த்தி சம்பத், மற்றும் கௌஷிக் ஆகியோர் கலக்கி வந்தனர். மாஸ்டர் செஃப் சீசன்1ன் டைட்டில் வின்னராக தேவகி விஜயராமன் பட்டத்தை தட்டிச் சென்றார்.


முதல் எபிஸோட் முடிந்த சூட்டோடு சூடாக, அதற்குள் மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2 ஆடிஷனை சன் டிவி தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஏன் இந்த அவசரம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்தால் எல்லாம் விட்டதைப் பிடிக்கத்தான் எனக் கூறுகிறார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் போட்டியாகத் தொடங்கப்பட்டது தான் மாஸ்டர் செஃப் தமிழ். விஜய் டிவி குக் வித் கோமாளி அளவுக்கு பிரபலமடையவில்லை என்ற வருத்தம் சன் டிவி நிர்வாகத்திற்கு பெரு வருத்தமாம். அதனால்தான் சீசன் 2 ஆடிஷனை அவசர அவசரமாகத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


மாஸ்டர் செஃப் வரலாறு..


உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென முத்தாய்ப்பாய் ஓரிடத்தைப் பிடித்து வைத்துள்ள ரியாலிட்டி ஷோதான் மாஸ்டர் செஃப். இந்த நிகழ்ச்சி முதல்முறையாக பிரிட்டனில் தான் ஒளிபரப்பானது. அங்கே மெகா ஹிட் அடிக்க நிகழ்ச்சி அடுத்தடுத்து வெவ்வேறு நாடுகளுக்கும் பரவியது.
ஆனால், மாஸ்டர் செஃப்பும் புதிய ஐடியா என்று சொல்லிவிட முடியாது அதற்கு முன்னோடியாக ஹெல்ஸ் கிச்சன் என்றொரு ரியாலிட்டி ஷோ இருந்தது. ஹெல்ஸ் கிச்சனுக்குப் போட்டாபோட்டியாக உருவான மாஸ்டர் செஃப் இன்று உலகளவில் மற்ற சமையல் போட்டி நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒரு பிராண்ட் அடையாளமாக உருவெடுத்துள்ளது.


ஹெல்ஸ் கிச்சன் ரியாலிட்டி ஷோவுக்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட மாஸ்டர் செஃப் இப்போது கிச்சன் போட்டிகளின் கிங்காக இருப்பது போல் விஜய் டிவியின் குக் வித் கோமாளிக்கு மாஸ்டர் செஃப் டஃப் ஃபைட் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அவ்வளவாகப் பூர்த்தியாகவில்லை என்பதால் தான் இப்போது சூட்டோடு சூடாக சன் டிவி அடுத்த சீசனை தொடங்கவிருக்கிறதாம்.


விஜய் சேதுபதி நீடிப்பாரா?


சீசன் 1 மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் பிரசன்ஸ் கேள்விகளுக்கு உள்ளானது. அவர் சிறந்த நடிகர் என்றாலும் கூட சிறந்த தொகுப்பாளராக இருக்க முடியாது என்றும், அதுவே மாஸ்டர் செஃப் சறுக்கலுக்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. இதனால், இந்த சீசனில் விஜய் சேதுபதி தொடர்வாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 


ஆடிஷனுக்கான ரூல்ஸ் இதுதான்:


மாஸ்டர் செஃப்பாக அது இது என்று பெரிய தகுதியெல்லாம் தேவையில்லை. சமையல் தொழிலை பிரதான வருவாயாக கொண்டிராத 18 வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மிக எளிமையான இந்த விதிமுறை இந்நிகழ்ச்சிக்கு பலரையும் ஈர்த்தது. இந்தப் போட்டிக்கு 3 பேர் கொண்ட நடுவர் குழு இருக்கும். போட்டியாளர்கள் சமையல் கைவண்ணத்தை ருசி பார்த்து அதிலிருந்து 50 பேரைத் தேர்ந்தெடுப்பார்கள். 




 


பின்னர் அந்த 50 பேரின் சமைக்கும் திறன், கலையம்ச அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்தப்படும். சமையல் நேரம், சமைத்த உணவை பிளேட்டிங் செய்யும் விதம், ருசி, பதம், மனம் எனப்பல அம்சங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். 50 பேரில் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு, இறுதிச் சுற்றில் 12 பேர் இடம்பெறுவர். இந்த ஒரு டஜன் பேரில் ஒருவர் தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார்.


ஆடிஷனை முடித்து விரைவில் நிகழ்ச்சியைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.