தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு செய்யப்படும் புரோமோஷன்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் படமானது நாளை (ஆகஸ்ட் 18) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிட்டதட்ட ஓராண்டுக்குப் பின் தனுஷ் படம் தியேட்டர்களில் வெளியாவதால் ரசிகர்கள் கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர். தியேட்டர்களில் விறுவிறுப்பாக முன்பதிவு ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விதவிதமாக புரோமோஷன்களை வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்றைய தினம் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர் இருவரும் படம் குறித்து, அனைவரும் குடும்பத்துடன் வந்து தியேட்டர்களில் பார்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ வெளியானது. படத்தில் நித்யா மேனன் தனுஷின் தோழியாக நடித்துள்ளார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வீடியோவில், “இந்த பலம் (தனுஷ்) இருக்கானே சரியான சாம்பார். அவன் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை. அவனைப் பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னா படத்தை கண்டிப்பா எல்லாரும் தியேட்டர்ல வந்து பாருங்க” என தெரிவித்துள்ளார். இப்படியான புரோமோ வீடியோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.