சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணத்துவர்கள் ஏராளம். அந்த வகையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக அறிமுகமானவர் ஆடம்ஸ். கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்த ஆடம்ஸ் நடிப்பின் மீது இருந்த தீராத காதலால் மீடியாவில் நுழைந்தார். 


 



 


ஆடம்ஸ் தன் தனித்துமான பேச்சு, ஸ்டைலான அணுகுமுறை என அனைத்திலும் தனித்து தெரிந்ததால் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களுடன் கலந்துரையாடி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் மூலம் ஆடம்ஸூக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தென்றல், முந்தானை முடிச்சு உள்ளிட்ட பிரபலமான சீரியல்கள் மூலம் நடிகராக அறிமுகமானார். தென்றல் சீரியலில் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது மிகவும் பொருத்தமாக அமைந்து இருந்தது. மிரட்டல் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் கூட சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 


 



 


தற்போது தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆடம்ஸ் தன்னுடைய அடுத்தக்கட்ட பயணமாக இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். ரொமான்ஸ் கலந்த த்ரில்லர் ஜானரில் திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அப்படத்திற்கு 'கேன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியன் படமாக இப்படம் வெளியாக உள்ளது. கோவை சரளா, கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், கருணாகரன், ரோபோ ஷங்கர், கௌசல்யா, அக்ஷரா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 


'கேன்' படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் உருவங்களை இணைத்தது போல வெளியாகியுள்ள இந்த போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எட்டு நாட்களில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.