தெலுங்கு திரையுலகின் ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து புஷ்பா என்ற ஒரே படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியன் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் அல்லு அர்ஜுன். சுகுமார் இயக்கத்தில் ரஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல்பாகம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்காக உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் கடந்த மாதம் படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் 6 தேதிக்கு ஒத்திவைப்பதாக படக்குழு அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டது.
தற்போது டிசம்பர் 6ம் தேதி வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயக்குநர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் இடையே கருத்து வேறுபாடு காரணமாக படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புஷ்பா 2 படத்தின் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த ஷெட்யூல் அநேகமாக ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் தற்போது குடும்பத்துடன் ஐரோப்பிய நாட்களுக்கு வெகேஷனுக்காக சென்றுள்ளார். ஒரு பாடல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நிலுவையில் உள்ளதால் படத்தின் எடிட்டிங் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தான் அமெரிக்காவில் இருந்து திரும்பிய இயக்குநர் சுகுமார் தற்போது ஹைதராபாத்தில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகிறார்.
ஏற்கனவே இருமுறை புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.அதை தொடர்ந்து மீண்டும் அது தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் விளம்பர பணிகளுக்கு சில கால அவகாசம் எடுத்து கொள்ளும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்படும். எனவே ஏப்ரல் 2025 வரை புஷ்பா படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
ஏற்கனவே இருமுறை ரிலீஸ் தள்ளிப்போனதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை புஷ்பா 2 படம் தள்ளிப்போவது கவலையடைய செய்துள்ளது.