2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கேட் நுழைவுத் தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்தும் நிலையில், இதற்கு ஆகஸ்ட் 24 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 முதுகலை பொறியியல் படிப்புகளில் ஐஐடி சார்பில் கேட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக மத்திய அரசுக் கல்வி நிறுவனங்கள் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் மாணவர்களை அனுமதிக்க கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற பெயரில் நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. 


அதேபோல பொறியியல், தொழில்நுட்பம் கட்டுமானம், அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கும் முனைவர்கள் படிப்புகளில் சேருவதற்கும் கேட் தேர்வு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.


பிப்ரவரி மாதம் கேட் தேர்வு


2025ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  


ஐஐடி ரூர்க்கி நடத்தும் கேட் தேர்வு


ஆண்டுதோறும் நடைபெறும் GATE தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்தும் நிலையில், 2025ஆம் ஆண்டு தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்த உள்ளது. கணினி மூலம் நடைபெற உள்ள 2025 கேட் தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


வேலைவாய்ப்புக்கும்...


அதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் (PSUs) கேட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களை வேலையில் சேர்க்கின்றன. 


தேர்வு முறை எப்படி?


3 மணி நேரத்துக்கு 30 தாள்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில், தாள்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண்கள் செல்லுபடி ஆகும்.


எனினும் இதற்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 1 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 1/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். 2 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 2/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும்.   


ஆகஸ்ட் முதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்


பொறியியல் 3ஆம் ஆண்டு அல்லது அதற்கடுத்த ஆண்டுகளில் படிக்கும் பொறியியல் மாணவர்கள், கேட் 2025ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்க உள்ளது. மாணவர்கள் செப்டம்பர் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணத்தைச் செலுத்தி, அக்டோபர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


கூடுதல் விவரங்களை https://gate2025.iitr.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.