200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நேற்று நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிற்கு 50 ஆயிரம் பிணையில் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் , நடிகைகள் நிக்கி தம்போலி மற்றும்  சோபியா சிங் ஆகிய இருவரையும் காவல்துறையினர் திகார் சிறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.


200 கோடி ரூபாய் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் தொடர்புடைய சுகேஷ் சந்திர சேகருக்கு யார் யாருடன் எல்லாம் தொடர்பு இருக்கிறது என காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில் , நிக்கி தம்போலி மற்றும் நடிகை சோபியா சிங் ஆகியோர் டெல்லி திகார் சிறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டு, குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகருடன் மீண்டும் சந்திப்பை ஏற்படுத்தியுள்ளனர். சுகேஷ் சந்திரசேகர் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து, சிறை அதிகாரிகளின் உதவியுடன் அவர்  சட்டவிரோதமான செய்லகளில் ஈடுபட்டு வருவதாக சில காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.




இந்த நிலையில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு குழு, நடிகைகள் நிக்கி தம்போலி மற்றும் சோபியா சிங் ஆகியோரை சனிக்கிழமையன்று திஹாரின் மத்திய சிறை எண் ஒன்றிற்கு அழைத்துச் சென்றது. அங்கு சுகேஷுடனான சந்திப்பு எப்படியாக இருந்தது என அதிகாரிகள் ‘ரீ-கிரியேட்’ செய்ய சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் விளம்பரதாரர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங் போன்ற உயர்மட்ட நபர்கள் உட்பட பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக சந்திரசேகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதுவரை பாலிவுட் நடிகர்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி மற்றும் முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிங்கி இரானி மற்றும் ஒப்பனையாளர் லீபாக்ஷி எல்லவாடி ஆகியோரை விசாரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


 பல முக்கிய பிரபலங்கள் திகார் சிறையில் சுகேஷை ஆடம்பரமான கார்களில் வந்து சந்தித்தாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் "சிறைக்குள் சந்திரசேகரை பலர் பார்வையிட்டனர். இருப்பினும், எங்கள் விசாரணைக்கு தொடர்புடையவர்களை மட்டுமே நாங்கள் வரவழைக்கிறோம். தற்போது, ​​சந்திரசேகர் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் “ என்றார். குற்றப்பிரிவு சிறப்பு போலீஸ் கமிஷனர் ரவீந்திர யாதவ் கூறுகையில்  "இந்த வழக்கில் நாங்கள் முழுமையான விசாரணை நடத்தி வருகிறோம், அதனால்தான் சந்திரசேகருடன் நடிகைகள் சந்திக்கும் காட்சியை மீண்டும் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் இந்த மோசடி எப்படி நடந்தது என்பது எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. இது வழக்குத் தொடர எங்களுக்கு உதவும். என்றார்.  சுகேஷ் சந்திரசேகர் தொலைக்காட்சி, சோபா, கார்பெட் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய முறையான அலுவலகத்தை சிறையில் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சிறை போல அல்ல , அவரது அலுவலகம் போலத்தான் இருந்தது என மற்றொரு காவலர் தெரிவித்திருந்தார்.




கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்தார். 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது மாட்டிக்கொண்ட அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறைக்கு சென்றார். சுகேஷ் சந்திரசேகர் அப்போது சிறையில் இருந்த போது இரு தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் அந்த தொழில் அதிபரில் ஒருவர் மனைவியிடம் ரூ.200 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். இந்த வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் இணைத்துள்ளது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு சில விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.