பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை செய்த இப்படம் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமான இயக்குநர் அட்லீ மற்றும் நடிகை நயன்தாராவின் மார்க்கெட்டும் பல மடங்கு எகிறிவிட்டது. 


நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஒரு புறம் இயக்குநராக அறிமுகமாகும் பணிகளில் பிஸியாக இருந்து வருகையில் மகள் சுகானா கான் தனது அறிமுக படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார். சுற்று சூழலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'ஆர்ச்சீஸ்' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார் சுஹானா கான்.  


 



ஆர்ச்சீஸ் ரிலீஸ் :


ஜோயா அக்தர் இயக்கத்தில் டைகர் பேபி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஆர்ச்சீஸ்' திரைப்படம் டிசம்பர் 7ம் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சுஹானா கான், அகஸ்தியா நந்தா, குஷி கபூர், வேதாங் ரெய்னா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டுள்ளது. 


அப்படி சுஹானா கான் 'ஆர்ச்சீஸ்' படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டு இருந்த போது அவரிடம் ஆலியா பட் தேசிய விருது வழங்கும் விழாவில் தன்னுடைய திருமண புடவையை அணித்திருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மிகவும் சாமர்த்தியமான பதில் அளித்து இருந்தார் சுஹானா கான். 


சுஹானாவின் கருத்து :


புதிய உடைகளை தயாரிக்கும் ஒவ்வொரு முறையும் ஏராளமான தழுவல் வெளியாகிறது என்பதை பலரும் உணர்வதே இல்லை. சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் ஆலியா முன்னெடுத்து வைத்துள்ள இந்த முயற்சி பாராட்டிற்குரியது. அத்தனை பெரிய செலிபிரிட்டியே பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது உடுத்திய உடையை அணியும் போது நாமும் பார்ட்டி அல்லது வேறு ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது இந்த முறையை பின்பற்றலாம் என தெரிவித்து இருந்தார் சுஹானா கான். 


 



கவனம் ஈர்த்த ஆலியா :


'கங்குபாய் கத்தியவாடி' திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார் நடிகை ஆலியா பட்.  டெல்லியில் நடைபெற்ற 69வது தேசிய விருது வழங்கும் விழாவில், 50 லட்சம் மதிப்பிலான தனது திருமண புடவையை அணிந்து வந்து மிகவும் கம்பீரமாக தேசிய விருதை பெற்று கொண்டார் நடிகை ஆலியா பட்.  அவரின் இந்த செயல் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு பாராட்டுகளையும் குவித்தது. 


கங்குபாய் கத்தியவாடி :


நடிகையாக வேண்டும் என்ற கனவோடு இருந்த ஆலியா பட்டை காதலித்து ஏமாற்றிய காதலன் அவளை மும்பையில் பாலியல் தொழில் செய்யும் இடத்தில் விற்றுவிடுகிறான். அங்கே பாலியல் தொழிலாளியாக இருந்த ஆலியா பாட் எப்படி 'கங்குபாய் கத்தியவாடி' யாக மாறுகிறார் என்பது தான் கதைக்களம். தனது மிக சிறப்பான நடிப்பிற்காக ஆலியா பாட் பாராட்டுகளை குவித்தார்.