தமிழ் சினிமாவின் மிகவும் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவரான சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தில் இணைய உள்ளார்கள் என தகவல் வெளியானது. அப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது. 


 




ஆனால் 'புறநானூறு' படத்திற்கு கால்ஷீட் அதிகமாக தேவைப்படும் என்பதால் தள்ளிக்கொண்டே போனது. தற்போது சூர்யா பாலிவுட்டிலும் களமிறங்கி இருப்பதால் அவரின் கால்ஷீட் மிகவும் நெருக்கடியாக இருக்கிறது என்பதால் அவரால் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் இணைவது சாத்தியமற்றது என தகவல்கள் வெளியாகி வந்தன. அதனால் அப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது. 


தற்போது அந்த செய்தியை உறுதியாக்கும் வகையில் தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தான் அந்த நடிகர் என கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் அமரன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தையும் முடித்துவிட்டு, சுதா கொங்கராவின் 'புறநானூறு' படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. 


மேலும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த நிலையில் தற்போது புதுமுக தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க உள்ளார் என்றும் அவர் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 




அப்படி இந்த கூட்டணி ஒன்று சேர்ந்தாள் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல் படமாக அமையும் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  


சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் இந்தி ரீமேக் படமான 'சார்ஃபிரா' படத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார். தமிழில் மாபெரும் வெற்றி படமாக அமைந்த இப்படம் இந்தியில் பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.