சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், சூரரைப்போற்று படம் திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த சிறப்புக்காட்சியில் இயக்குநர் சுதாகொங்கரா மற்றும் ஜிவிபிரகாஷ் குமார் கலந்து கொண்டனர். 






தொடர் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு ‘ கம்பேக்’ படமாக அமைந்த திரைப்படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு அமேசான் ஓடிடிதளத்தில் வெளியிடப்பட்டது. ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்திற்கு நேற்று 5 பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் கிடைத்தன.


 






இதே போல இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படமும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தப்படமும் பல்வேறு சர்வதேச விழாக்களில் விருதுகளை வென்றது.






இந்த இரண்டு படங்களும் ஓடிடி தளத்தில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்தப்படங்களை  திரையில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த அந்த ஏக்கத்தை போக்கும் வகையிலும்,சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த இரண்டு படங்களையும் ஜூலை 22 முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை சென்னை பாடியில் பகுதியில் இருக்கும் க்ரீன் சினிமாவில் திரையிட பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.




இந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாளான இன்று சூரரைப்போற்று படத்தை காண அங்கு சூர்யாவின் ரசிகர்கள் குவிந்தனர். இந்தநிலையில் அந்தப்படத்தை கொண்டாடும் விதமாக அந்தப்படத்தின் இயக்குநர் சுதாகொங்கரா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.