ஆகாயம் தமிழ் யூ ட்யூப் சேனலில், சமீபமாக தொடர்ச்சியாக வெளியாகிவரும் ஹேமா கமிட்டி பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய பாடகி சுசித்ரா, வைரமுத்து தன்னிடமும் தவறான நோக்கத்துடன் பேசி இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.


மே மாசம் தொண்ணூத்தெட்டில் மேஜரானேனே என்னும் பாட்டை பாடிய சமயத்தில் தனக்கு தொலைபேசியில் அழைத்து, ”உன் குரலில் காமம் இருக்கும்ம்மா.. உன் குரல் மேல எனக்கு காதலே வருதும்மா”  என்றார் வைரமுத்து, என்று பேசியிருக்கிறார் சுச்சி.


வீட்டுக்கு வாம்மா, உனக்கு ஒரு பரிசு கொடுக்கணும்” என்று சொன்னார் வைரமுத்து. “நானும் என் பாட்டியும் வைரமுத்து வீட்டுக்குப் போயிருந்தோம். என் பாட்டிதான் அதிகமா பேசினாங்க. நீங்க என் பேத்திக்கு தந்தை மாதிரி. நீங்கதான் அவங்களைப்போல சின்னப்பெண்களை வளர்த்து விடணும்னு சொன்னாங்க. ஏதோ பரிசு கொடுக்கணும்னு சொன்னீங்களாமே என்று என் பாட்டி சொன்னதுக்கு, பேண்டீன் ஷாம்பூ கண்டிஷனர் பாட்டில்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அதுக்குப்பிறகும் பண்ணை வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டார். ஆனால் நான் ஃபோனைக் கட் பண்ணி விட்டுட்டேன்” என்றார் சுசித்ரா.


பலரும் வைரமுத்துவைப்போலவே, காமாந்தகர்கள்தான். இயக்குநர் கே.பாலச்சந்தர் சாகும் வரையிலுமே அப்படித்தான் என்றார்.


நடிகை செளமியா, பத்திரிக்கையாளர் பர்கா தத்திடம் தெரிவித்திருக்கும்  பாலியல் கொடுமைகள் குறித்துப் பேசிய சுசித்ரா, “செளமியா கூறியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சிகரமானது. அவர் முன்பே பேசி இருக்கவேண்டும். பயந்தும், ஒடுங்கியும் இருந்ததால், அதனால் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பார்கள். அப்போதே பேசியிருந்தால், அவர்களைக் காப்பாற்றி இருக்கலாம். சமூகத்தில் பொருளாதார ரீதியில் நல்ல இடத்தில் இருக்கும் பெண்கள் இத்தகைய விஷயங்களைப் பேச முன்வரவேண்டும்” என்றார்.


வைரமுத்து குறித்து சின்மயி வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பற்றி பேசிய சுசித்ரா, “சின்மயி தனியாகத்தான் போராடி வருகிறார். தனியாகத்தான் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். இப்போதும் ஹேமா கமிட்டி வந்த பின்பு பொங்கும் யாரும் அப்போது அவருக்கு ஆதரவாகப் பேசவில்லை. என்னைக் கூப்பிட்டிருந்தால் நான் அவருக்கு ஆதரவாகப் பேசி இருப்பேன். ஆனா சின்மயிக்கு என்னைப் பிடிக்காது” என்றார்.