அசுரன் , கர்ணன் போன்ற வெற்றிப்படங்களுக்கு பிறகு , தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவான படம் “ஜகமே தந்திரம் “ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி இந்த படம் வெளியானது. கடந்த மே மாதமே படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை சஷிகாந்த் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார், படம் வெளியாவதற்கு முன்னதாகவே வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இது படத்தின் மீதான எதிர்பார்பை அதிகப்படுத்தியது.


முன்னதாக  படத்தின் ப்ரமோஷன் நிகழ்சியில் படக்குழு பங்கேற்றது. அப்போது பேசிய இயக்குநர், ஜகமே தந்திரம் தனது “கனவு திரைப்படம் “ என குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களின் பிரச்சனைகளை  கூறுவதாக இருந்தாலும், கதையில் அந்த அளவிற்கு ஆழம் இல்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. ஆனாலும் படத்தில் தனுஷ் மற்றும் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரின் நடிப்பை பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பாராட்டினர். ஆனால் ஹாலிவுட்டின் மாஸ் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோவை இயக்குநர் சரியாக பயன்படுத்த தவறியாதக பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர்.  இவர்களை தவிற கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 




படம் வெளியான பிறகு படம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது படக்குழு. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் மௌனம் கலைத்துள்ளார். சஷிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் , ஜகமே தந்திரம் படத்தின் மேக்கிங் புகைப்படம் ஒன்றினை பகிர்ந்து “ இலக்கை அடைவது மட்டும் வெற்றியல்ல, தோல்வியடைந்தால் அது தோற்பதும் அல்ல , தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.


தற்போது சஷிகாந்த் வெளியிட்ட இந்த  ட்விட்டர் பதிவு, விமர்சனங்களுக்கு படக்குழு சார்பில் கொடுத்த பதிலடியாக பார்க்கப்படுகிறது.  தயாரிப்பாளர் சஷிகாந்த் முன்னதாக சமுத்திரக்கனி நடிப்பில் உருவான “ஏலே” என்ற திரைப்படத்தை தாயாரித்திருந்தார். இந்த திரைப்படம் நேரடியாக  தொலைக்காட்சியில் வெளியாகி , பின்னர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.


ஜகமே தந்திரம்   படம் 190 நாடுகளில், 17 மொழிகளில்  அதிரடியாக வெளியிடப்பட்டது. மேலும் புகழ்பெற்ற “டைம்ஸ் சதுக்கத்திலும்” ஜகமே தந்திரத்தின் ப்ரமோஷன் போஸ்டர்கள் இடம்பெற்றிருந்தன. தனுஷ் தற்போது ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார்  இதனை அடுத்து அவர் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்திலும் செல்வராகவன்  இயக்கத்தில் ஒரு படத்திலும் வெற்றிமாறன் இயக்கும்  படத்திலும் அடுத்தடுத்து கமிட்டாகியுள்ளார். இது தவிற பாலிவுட்டின் பிரபல இயக்குனரான தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.