சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தது பற்றி நடிகர் இலைக்கடை முருகன் நேர்காணல் ஒன்றில் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.


கடந்த 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரகனி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் “சுப்பிரமணியபுரம்”. ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இப்படம் கல்ட் கிளாசிக் படங்களில் மிக முக்கியமான ஒன்று. ஒரு படம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மரபை மீறி இன்று பார்த்தாலும் நட்பு, துரோகம், காதல், தடம் மாறும் இளைஞர்களின் வாழ்க்கை என சுப்பிரமணியபுரம் காட்டிய பாடங்கள் அதிகம். இதனாலேயே இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. 


இந்த படத்தில் முக்கிய நடிகர்கள் தாண்டி ஊர் தலைவர் மொக்கசாமி, மைக்செட்டுக்காரர், அவரது மனைவி ராசாத்தி கேரக்டரில் நடித்தவர்களும் கவனிக்கப்பட்டனர். அந்த வகையில் தலைவர் மொக்கசாமியாக நடித்த இலைக்கடை முருகன் நேர்காணல் ஒன்றில் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.






நடிக்கிறதுக்கு முன்னாடி இலைக்கடை நடத்திட்டு இருந்தேன். இலைக்கடை முருகன் என சொன்னால் எல்லாத்துக்கும் தெரியும். காலையில லோகேஷன் பார்க்க சசிகுமார்,ஜெய் என அனைவரும் கடைக்கு பக்கத்துல வந்து போட்டோ எடுத்துட்டு இருந்தாங்க. அப்போ எனது மாமா, சிங்கம் மாதிரி என் மாப்ள இருக்கப்ப வேற யாரயோ என் போட்டோ எடுக்குறீங்க என கேட்க, திரும்பி வந்த சசிகுமார் போட்டோ எடுத்து, ஜெய்யிடம் என்னைப் பற்றிய விவரத்தை கொடுக்க சொன்னாங்க. அப்புறம் தான் சசிகுமார் குடும்பம் பற்றிய விவரம் தெரிந்தது. அவரது அப்பா ரொம்ப பழக்கம். 


அப்புறம் நான் சென்னை போய்ட்டு வர்றப்ப போன் வந்துச்சு. சசிகுமார் லாட்ஜ் ஒன்னு இருக்கு. அங்க வச்சித்தான் பேசினாங்க. நான் முதலில் நடிக்க மறுத்தேன். சசிகுமார் தான் என்னை பேசி பேசி சம்மதிக்க வைத்தார். எங்க அண்ணன் நாடகத்துறையில இருந்தார். ஆனால் பெரிதாக சாதிக்கவில்லை. அதனால் குடும்பத்தினர் சினிமாவில் நடிக்க சொல்ல சரி பண்ணுவோம் என சுப்பிரமணியபுரம் படத்தில் நடிக்க சம்மதித்தேன். 


ஆனால் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னாடி எனக்கு விபத்து ஏற்பட்டது. அதன்பின்னர் என்னைப் பார்த்த ஜெய் பரவாயில்லை வாங்க என சொல்லி திண்டுக்கல்லுக்கு கூட்டிட்டு போய்டாங்க. படத்தில் நான் மைக் செட் காரரிடமும், பூசாரியிடம் பேசும் சீன் எடுத்தாங்க. 7.30 மணிக்கு ஆரம்பிச்ச சீன் முடிய 10.30 மணி ஆகிடுச்சு. 


சசிகுமார் இப்ப நீங்க இந்த சீனை பேசலன்னா சினிமாவே எனக்கு வேண்டாம் என சசிகுமார் சொல்லிட்டாரு. ஒரே ஷாட்டில் அந்த டயலாக் பேச வேண்டும் என்பதால் கொஞ்சம் சிரமப்பட்டேன். ஆனால் கொஞ்சம் கூட சிரமப்படாமல் சசிகுமார் சொல்லிக் கொடுத்தார். அதனாலே என்னோட வளர்ச்சியில அவருக்கு முழு பங்கு இருக்கு. படம் பார்த்தும் இன்னைக்கு வரைக்கும் எல்லாருக்கும் அந்த சீனை மறக்க முடியல. பலரும் என்னை கிண்டல் செய்வாங்க என முருகன் தெரிவித்துள்ளார்.