வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டீர்களா என்று தொடர்ந்து சின்மயிடம் ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் அதற்கு அவர் பதில் அளித்திருக்கிறார். 


பிரபல பாடகியும், பின்னணி குரல் கொடுப்பவருமான சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத்தம்பதிக்கு இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் இரட்டை குழந்தைகளாக ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை சோசியல் மீடியா வாயிலாக தெரிவித்தனர். இருப்பினும் ஒரு தரப்பினர், சின்மயி கர்ப்பகால புகைப்படங்கள் எதையும் முன்னதாக பகிராத காரணத்தால்,  சினிமயி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளாரா? போன்ற கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சின்மயி தனது இன்ஸ்டாகிராம் தான் கர்ப்பமாக இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து சில பதிவுகளை அதில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், “ கர்ப்பமாக இருந்த 32 வாரங்களில் நான் எடுத்த ஒரே செல்ஃபி, மேல் நான் பதிவிட்டு இருக்கும் செல்ஃபிதான்” என்று பதிவிட்டு இருக்கிறார்.  


 






முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டு இருந்த அவர், “நான் கர்ப்பமாக இருப்பது போன்ற படங்களை வெளியிட காரணத்தால் பலர் என்னிடம் சமூக வலைதளங்கள் வாயிலாக, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டீர்களா? என்று கேட்டு வருகின்றனர். உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் என்னை பாதுகாத்து கொள்வதற்காகவே மட்டுமே இந்த செய்தியை என்னுடைய நெருங்கிய வட்டாரத்திற்கு மட்டும் தெரிந்து கொள்ளுமாறு பார்த்துக்கொண்டேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். 


மேலும், முன்னதாக தனது குழந்தைகளுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்திருப்பதாக குறிப்பிட்டு இருந்த சின்மயி, இவர்கள் எங்களின் புதிய மற்றும் பிரபஞ்சத்தின் மையம் என்றும் இன்ஸ்டாகிராமில் இன்னும் தனக்கு தடை நீடிப்பதால் தன்னிடம்  மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்து இருந்தார். மேலும் எனது தனிப்பட்ட வாழ்க்கை, எனது குடும்பம், எனது நண்பர்கள் வட்டம் ஆகியவற்றைப் பற்றி எப்போதும் கவனித்துக் கொண்டிருப்பேன். எங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள் நீண்ட காலத்திற்கு சமூகத்தில் இருக்காது.” என்றும் குறிப்பிட்டு இருந்தார்.