ரஜினி சாரின் வளர்ச்சிக்கு அவரோட மனசு தான் காரணம் என்று கூறியுள்ளார் ஸ்டன்ட் நடிகர் அழகு. 


சினிமா உலகில் குணச்சித்திர நடிகராகவும், ஸ்டண்ட் கலைஞராகவும் அறிமுகமானவர் நடிகர் அழகு. இவர் சிவாஜி, ரஜினி, கமல், மோகன்லால், அமிதாபச்சன் என சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்கள் பலருடனும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.


1975 ஆம் ஆண்டு வெளியான “துணிவே துணை” என்ற படத்தில் ஜெய்சங்கர் நடிக்கும் சண்டை காட்சியில் முதன் முதலாக நடித்தார்  இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒரியா, ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.


அழகுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டையில் உள்ள குளத்துப்பட்டி. இவருடைய பெற்றோர் சின்ன வயதிலேயே இறந்து விட்டார்கள். அதன்பின் இவர் தாத்தா வீட்டில் தான் வளர்ந்தார். 


1969 ஆம் ஆண்டு வேலை தேடி சென்னைக்கு வந்தார். எல்லாம் தாண்டி ஒரு வழியாக அவருக்கு வேலை கிடைத்தது. இருந்தாலும் தற்காப்பு கலையின் மீது உள்ள ஆர்வத்தினால் கராத்தே, களரி, சிலம்பம் போன்ற கலைகளைக் கற்றுக்கொண்டார். பின் ஒரு நிகழ்ச்சிகயில் தான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை திறமையை வெளிப்படுத்தினார். சண்டை இயக்குநர் மாதவன் இதை பார்த்து அழகுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.


ரஜினி சாரின் மனிதாபிமானம்:


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மீது அளவுகடந்த பிரியமும் மரியாதையும் கொண்டவர் அழகு. ரஜினிகாந்த் பற்றி பேசிய அழகு, ரஜினி சாரின் வளர்ச்சிக்கு அவரோட மனசு தான் காரணம். அவருக்குள்ள இருக்க ஆன்மீகமும் காரணம். எல்லோருக்கும் அது அமையாது. ரஜினி சார் அதில் சிறந்தவர். அவர் மனிதாபிமானம் மிக்கவர். ஒருமுறை ஏ.எஸ்.கார்டனில் படப்பிடிப்பு நடந்தது. இரவு 1 மணி இருக்கும். நாங்கள் ஃபைட் பண்ணிட்டு இருந்தோம். ரத்னம் சார் தான் ஸ்டன்ட் டைரக்டர். ரஜினி சார் கொஞ்ச தூரமா சேர் போட்டு உட்கார்ந்திருந்தார். நாங்கள் சூட்டிங்கில் இருந்தோம். திடீரென ரஜினி சார் இருட்டில் இருந்து வருகிறார். ரத்னம் பதறிப்போய் எங்க சார் போனீங்க என்று கேட்டார்.


இல்லை ரெண்டு பேரு என்னை கிண்டல் பண்ணாங்க அதான் அவங்க கிட்ட போய் தோளில் கை போட்டு அபடியே அழைத்துச்சென்று 5 எண்ணுவதற்குள் இங்கிருந்து கிளம்பிடுங்கன்னு எச்சரிச்சிட்டு வந்தேன் என்றார். ரத்னம் பதறிப்போய் என்ன சார் இது. ஃபைட்டர்ஸ கூப்பிடலாம்ல என்றார். ஏன் ஃபைட்டர்ஸ கூப்பிடணும் அவுங்க என்னத்தான கிண்டல் பண்ணாங்க. நான் தான் சமாளிக்க வேண்டும். ஃபைட்டர்ஸ ஏன் இழுத்துவிடனும்னு சொன்னாரு பாருங்க. அந்த மனிதாபிமானம் தான் சார் அவர் வெற்றிக்குக் காரணம்.


ராணுவ வீரன் படத்தில் ஒரு ஃபைட் சீனில் என் மீது தீ வைப்பார்கள். நான் ஃபையர் ப்ரூஃப் ஆடையெல்லாம் போட்டு தயாராக இருந்தேன். முதலில் தீ வைத்தார்கள் பற்றவில்லை. அப்புறம் கொஞ்சம் பெட்ரோல் ஊற்றி வைத்தார்கள். தீ மளமளவென எரிந்தது. நான் செத்துப்போவேன் என்றே நினைத்தேன். கீழே விழுந்து உதவிக்குரல் எழுப்பினேன்.


உடனே தீயணைப்பு வீரர்கள் தயாராக இருந்ததால் தண்ணீரைப் பீய்ச்சி காப்பாற்றினார்கள். அடுத்தநாள் ஸ்பாட்டுக்கு வந்த ரஜினி சார், என்னிடம் நேர வந்து எதுக்கு இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்குறீங்கனு திட்டினார். அந்த அக்கறை எத்தனை பேருக்கு வரும் சார்.




அதுபோல் எம்ஜிஆர் காலத்தில் இருந்து ஸ்டன்ட் செய்யும் ஆர்டிஸ்ட் ஒருவர் இருக்கிறார். அவர் எப்போதும் கையில் பெரிய மோதிரம் போட்டிருப்பார். அந்த மோதிரத்தைப் பார்த்து வியக்காதவர்கள் இருக்க முடியாது. அவ்வளவு பெரிய வேல் மோதிரம் அது. அப்படி ஒரு நாள் ரஜினி சார் சூட்டிங்குக்கு அந்த நபர் வந்தார். உடனே அவரை அழைத்த ரஜினிகாந்த் விரலில் இருந்த மோதிரம் எங்கே என்றார்.


அந்த நபரோ அது சம்பாதிக்கப் போயிருக்கு என்றார். ரஜினி சாருக்கு புரியவில்லை. பக்கத்தில் இருந்தவர் அந்த மோதிரத்தை அவர் அடகுவைத்திருப்பதைக் கூறினார். அந்த நபரும் சென்றுவிட்டார்.பின்னர் ரஜினி சார் இயக்குநரைக் கூப்பிட்டு அந்த நபருக்கு பணம் கொடுத்து மோதிரத்தை மீட்டு மறுநாள் போட்டுவர வேண்டும் என்று சொன்னார்.


இந்த மாதிரியான நல்ல எண்ணங்களால் தான் ரஜினிகாந்த் எவ்வளவு உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் கூட சிகிச்சைகள் பலனளித்து மீண்டு வந்துள்ளார் என்றார்.