தனிநபர் வரி செலுத்துவோர், 2022-23 ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆகும். காலக்கெடுவுக்கு பிறகு, வருமான வரி தாக்கல் செய்யத் திட்டமிடுபவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


இருப்பினும், குறிப்பிட்ட தேதிக்குள் ஒருவர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யத் தவறினால் கூட அபராதம் விதிக்கப்படாமல் இருப்பதற்கு சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூலை 31ஆம் தேதியுடன் காலக்கெடு முடிந்துவிட்டாலும் கூட கால தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யலாம்.






தற்போதுள்ள சட்டத்தின்படி இம்மாதிரியான சூழலில், 5,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு சில தனி நபர்களுக்கு அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தனி நபரின் மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பிற்குள் இருந்தால், அபராதம் விதிக்கப்படாது.


புதிய விதிகளின்படி, தனிநபர் வரி செலுத்துபவருக்கு அடிப்படை விலக்கு வரம்பாக 2.5 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பழைய வரி வதிகளின் கீழ், வரி செலுத்துபவரின் வயதைப் பொறுத்து விலக்கு வரம்பு இருக்கும். பழைய வரி முறையின்படி, 60 வயது வரையிலான வரி செலுத்துவோருக்கு 2.50 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் என்பது விலக்கு வரம்பாக நிர்ணயிக்கப்பட்டது.


ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை உள்ள 60 முதல் 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கும் அபராதம் விதிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேல் உள்ள மிக மூத்த குடிமக்களுக்கு விலக்கு வரம்பு என்பது 5 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும், ஒரு நபரின் வருமானம் ஆண்டு வரி விலக்கு வரம்பை விட குறைவாக இருந்தாலும், தனிநபர்கள் சில நிபந்தனைகளின் கீழ் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


ஒரு நிதியாண்டில் ஒரு வங்கி அல்லது கூட்டுறவு வங்கியில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்பு வங்கி கணக்கில் வரி செலுத்துவோர் மொத்தம் 1 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்திருந்தால், வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமாகும். இதேபோல், ஒரு நபர் தனக்காகவோ அல்லது வெளிநாடு செல்வதற்காகவோ 2 லட்சத்து ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.


ஒரு வருடத்தில் 1 லட்சத்துக்கு மேல் மின்சாரக் கட்டணம் செலுத்திய தனிநபர், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளின் கீழ் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய நபர்கள் காலக்கெடுவை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை தவறவிட்டதற்காக இந்த வரி செலுத்துவோர் தண்டிக்கப்படுவார்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண