அமரன்
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது . சாய் பல்லவி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியுள்ளது அமரன் திரைப்படம் . சிவகார்த்திகேயன் கரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக அமரன் படம் அமைந்துள்ளது. வெளியான முதல் நாளில் அமரன் படம் உலகளவில் ரூ 42.3 கோடி வசூலித்துள்ளது. முதல் வாரத்திற்குள் அமரன் படம் 100 கோடி வசூலை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் அமரன் படத்தைப் பாராட்டியுள்ளார்கள். பல திரைப்பிரபலங்கள் இப்படத்தினை பாராட்டி வரும் நிலையில் ஓ மை கடவுளே , டிராகன் , எஸ்.டி.ஆர் 49 படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அமரன் படம் பற்றி அஸ்வத் மாரிமுத்து
" என் பெற்றோர்கள் நான் ராணுவத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். என்னுடைய 8 ஆம் வகுப்பில் நான் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் பயம் காரணமாக நான் அதில் சேர்ந்து படிக்கவில்லை. இன்று அமரன் படம் பார்த்து நான் செய்தது தவறு என்று உணர்கிறேன். அந்த பள்ளியில் நான் படித்திருக்க வேண்டும். மேஜர் முகுந்தின் வாழ்க்கை ஒரு வீர காவியம். சிவகார்த்திகேயன் அதை முழுமையாக்கியிருக்கிறார். சாய் பல்லவி போல் படத்தின் தொடக்கத்தில் நான் அழுதேன் கடைசியில் அவர் தனது அழுகையை கட்டுப்படுத்தியது போல நானும் கட்டுப்படுத்திக் கொண்டேன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எல்லா துறையிலும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார். அதற்காக அவரை நாம் கொண்டாட வேண்டும்." என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.