விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இந்தாண்டு தீபாவளிக்கு இரு நாட்களில் மட்டும் 16.35 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. 


ரூ.16.35 கோடிக்கு மது விற்பனை


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 195 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 109, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 86 டாஸ்மாக் கடைகளும் உள்ளன. இந்த கடைகள் மூலம் தினசரி சராசரியாக 3.50 கோடி முதல் 4.50 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடந்து வருகிறது. விழாக்காலங்களில் விற்பனை இருமடங்காக அதிகரிப்பது வழக்கம்.


அந்த வகையில், தீபாவளி பண்டிகை தினத்தில் இரு மடங்கு மது விற்பனை நடந்துள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ம் தேதி 7.50 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. மறுநாள் 31ம் தேதி தீபாவளி தினத்தில் 8.85 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்தாண்டை விட 50 லட்சம் ரூபாய் அளவில் கூடுதலாக விற்பனை நடந்துள்ளது. இந்தாண்டு, அதிகளவில் குறிப்பாக பீர் வகைகள் விற்பனையாகியுள்ளதாக, டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.


ஆண்டு தோறும் தீபாவளி நாளில் மது விற்பனை அதிகரித்து, தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருவதால், இந்தாண்டு மது விற்பனை புள்ளி விபரங்களை தெரிவிக்கக் கூடாது என டாஸ்மாக் மேலிட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், முழுமையான புள்ளி விபரங்களைக் கொடுக்க முடியாதென கூறி, அந்தந்த மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் தயக்கத்துடன், தோராயமாக விற்பனை நிலவரங்களை குறைத்து கூறியுள்ளனர்.


டாஸ்மாக் கடைகளில் ரூ.430 கோடிக்கு மது விற்பனை 


தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில், தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு, மதுபான வகைகள் விற்பனையாகின்றன. இது, வார விடுமுறை மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. தீபாவளி பண்டிகை, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சொந்த ஊர் சென்ற பல, 'குடி'மகன்கள் நண்பர்களுடன், மது விருந்தில் ஈடுபட்டனர். இதற்காக முந்தைய நாளே, மது வகைகளை அதிகம் வாங்கினர்.


இதனால், 30ம் தேதியும், தீபாவளி தினத்தன் றும், 430 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகின. தீபாவளிக்கு மட்டும், 220 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த, 2023ல், தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என, இரு நாட்கள் மது விற்பனை, 467 கோடி ரூபாயாக இருந்தது.


இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்.. தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த நாள் அரசு விடுமுறை என்பதால், டாஸ்மாக் அலுவலகங்கள் செயல்படவில்லை. இதனால், மது விற்பனை விபரம் குறித்த தகவல், முழுதுமாக கிடைக்கவில்லை. எனினும், மது வகை அனுப்பியது, ஊழியர்களிடம் கிடைத்த தகவல் அடிப்படையில், 430 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.


இந்த தீபாவளிக்கு, நான்கு நாட்கள் அரசு விடுமுறை வந்ததால், பலரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மது வாங்குவதற்காக, தீபாவளிக்கு குறைவாக வாங்கி உள்ளனர். இதனால் தான், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மது விற்பனை சற்று குறைந்துள்ளது. மாதம், 50 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன. அதில் சாதாரண மது வகை பங்கு, 65 சதவீதம், நடுத்தரம், 20 சதவீதம், பிரீமியம் வகை, 15 சதவீதம் இருக்கும். தீபாவளி தினத்தில், பிரீமியம் மது விற்பனை, 30 சதவீதமாகவும்; நடுத்தர வகை, 20 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.