நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிகர் சிம்பு வேற மாதிரியான லுக்கில் ரசிகர்களுக்கு தெரிவார் என அப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார். 


கமல் கூட்டணியில் சிம்பு 


நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிலம்பரசன் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். அவரின் கம்பேக் படமாக் மாநாடு அமைந்தது. தொடர்ந்து மஹா, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து படங்கள் வெளியானதால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே சிம்புவின் 48வது படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். 


இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் 10ஆம் தேதி வெளியானது. படம் குறித்த அறிவிப்பை “கனவுகள் நிச்சயம் நனவாகும்” என்ற கேப்ஷனுடன் சிம்பு குறிப்பிட்டு இருந்தார். கமல் - சிம்பு கூட்டணி திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. சுமார் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் சிம்புவின் சினிமா கேரியல் சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த படத்தில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பின் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் ஹீரோயினாக நடிக்க வைக்க தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, திஷா பதானி ஆகியோருடன்  பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் சிம்பு படம் குறித்து முதல்முறையாக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி பல தகவல்களை ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். 


வரலாற்று படமாக இருக்கும் 


“சிம்புவுடன் தான் இணைய இருக்கும் இந்த படம் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு வரலாற்று படமாக இருக்கும். இந்த படத்தில் இதுவரை யாரும் பார்க்காத சிம்புவின் மறுபக்கம் வெளிப்படும். இது மிகப்பெரிய பட்ஜெட்  என்பதால் படப்பிடிப்புக்கு முந்தைய தயாரிப்பு பணிகளுக்கு நீண்ட நாட்கள் தேவைப்பட்டது. தற்போது அனைத்தும் முடிவடைந்து ஷூட்டிங் செல்வதற்கான நேரம் வந்து விட்டது” என தேசிங்கு பெரியசாமி கூறியுள்ளார். 


மேலும், “சிம்பு திறமையான நடிகர்கள் ஒருவர். இந்த கதை அவரது திறமையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். திரையுலகில் சில இயக்குநர்கல் மட்டுமே அவருடைய திறமைகளை முழுவதுமாக பயன்படுத்தி உள்ளார்கள். அதனால் இப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கும். இந்த படத்துக்காக சிம்பு தாய்லாந்து சென்று தற்காப்பு கலைகள் கற்றார். தொடர்ந்து லண்டனில் தீவிர ஒர்க் அவுட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதேசயம் ஹீரோயின் குறித்து வெளியான தகவல் அனைத்து வதந்தியாக இருந்தாலும், அதில் சொல்லப்பட்டுள்ள நடிகைகள் தேர்வு சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் இதுவரை ஹீரோயின் யார் என்பதை உறுதி செய்யவில்லை” என தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.