தொலைக்காட்சி சீரியல் ரசிகர்களை அதீத எதிர்பார்ப்பில் தள்ளக்கூடிய வகையிலான திரைக்கதை கொண்ட நெடுந்தொடராக கருதப்படுகிறது `ரோஜா’. வழக்கமான குடும்பப் பின்னணியைக் கொண்டிக்கும் கதை என்ற போதும், அதனை ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலான காட்சி அமைப்புகளின் மூலமாக வெற்றி கண்டிருக்கும் தொடர் இது என்று கருத முடிகிறது. சில சமயங்களில், `ரோஜா’ தொடர் தனது ரசிகர்களின் பொறுமையைச் சோதித்தாலும், அதற்கென்று இருக்கும் ரசிகர் பட்டாளத்தில் குறை எதுவும் ஏற்படுவது இல்லை. 


`ரோஜா’ தொடரின் வெற்றிக்கு அதன் திரைக்கதை முக்கிய காரணம் வகிக்கிறது என்றாலும், மற்றொரு காரணம் அதன் முன்னணி நடிகர்களும், நடிகைகளும் ஆவர். குறிப்பாக, ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா நல்கரி, அர்ஜூன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுப்பு சூரியன் ஆகிய இருவரும் இந்தத் தொடரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணிகளாக உள்ளனர். இவர்கள் இருவருக்கும் தனியாக ரசிகர்கள் பெருகி வரும் நிலையில், இவர்களுக்கு இடையிலான காதல் காட்சிகளுக்கு எப்போதும் மவுசு அதிகம்.



தனது அறிமுகத் தொடரான `ரோஜா’வில் நடித்து வரும் பிரியங்கா நல்கரி, இல்லத்தரசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த பிரியங்கா, தனது சிறு வயது முதலே நடிப்பின் மீது தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். மேலும் அவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியுள்ளார். அதன் பிறகு, சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த அவருக்கு, கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் வெளியான `அந்தாரி பந்துவையா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


தொடர்ந்து `நா சாமி ரங்கா’, ` வெல்கம் டூ அமெரிக்கா’, `கிக் 2’, `ஹைப்பர்’, ராணா டகுபதியின் `நேனே ராஜா நேனே மந்திரி’ முதலான தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்த பிரியங்கா, தமிழில், சித்தார்த் நடிப்பில் வெளியான `தீயா வேலை செய்யணும் குமாரு’, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த `காஞ்சனா 3’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். மொத்தமாக பிரியங்கா நடித்துள்ள 10 படங்களும், பெரிய வெற்றிப் படங்கள் என்றாலும் அவர் பிரபலமான நடிகையாக உயர்வதற்கு `ரோஜா’ தொடரே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர் தற்போது சுமார் 1000 எபிசோடுகளையும் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.



தற்போது புகழ்பெற்ற முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் பிரியங்கா, தனது தொடக்க காலத்தில் ஒரு வேளை உணவிற்காக பெரும் இன்னல்களை அனுபவித்துள்ளார். அம்மா, அப்பா, தனது இரண்டு தங்கைகள் என அனைவரும் ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர். ஒரு விபத்தில் தனது அப்பாவின் கால் முறிந்து வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட, அது பிரியங்காவின் குடும்பத்தை வறுமைக்குத் தள்ளியுள்ளது.


பணம் இல்லாமல், கல்லூரி படிப்பை நிறுத்திய அவர், குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்குச் சென்றுள்ளார். தற்போது பிரபலமான நடிகையாக உள்ள இவர், தனது தங்கைகளைப் படிக்க வைத்ததோடு, தானும் கல்வி பெற்றுள்ளார். வறுமையில் வாடிய தனது குடும்பத்தை முன்னேற்றியுள்ள பிரியங்கா தற்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பங்களில் `ரோஜா’ என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளார்.