நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்திற்கு தடைக்கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 


 பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில் முக்கிய வேடத்தில் வடிவேலு,ஃபஹத் ஃபாசில், லால், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு  நிலவியது. 


மாமன்னன் படமானது ஜூன் 29 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் மாமன்னன் படத்தொன்   ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி  மாமன்னன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.  


இந்த படம் நடிகர் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். நடிகர்கள் கமல்ஹாசன்,  கவின், சிவகார்த்திகேயன், சூரி, தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தேனாண்டாள் முரளி, கலைப்புலி எஸ்.தாணு, கே.ஆர்., இயக்குநர்கள் வெற்றிமாறன், கே.எஸ்.ரவிக்குமார், மிஸ்கின், விஜய் ஆண்டனி, தியாகராஜா குமாரராஜா, ஏ.எல்.விஜய், ரவிகுமார், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாமன்னன் படத்தை வெளியிட தடைக்கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


என்ன நடந்தது? 


ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு  உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு தொடங்கி 80 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு உள்ள நிலையில், இந்த படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த படம் தனது கடைசிப்படம் என சொல்லியுள்ளார். 


ஏஞ்சல் படத்துக்காக இதுவரை ரூ.13 கோடு செலவு செய்யப்பட்டது. இந்த படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் அதனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷூட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். எனவே எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி நிறைவு செய்து தர வேண்டும். மேலும் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.