தமிழ் சினிமாவில் ஆழமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறார் நடிகர் சூர்யா. இந்நிலையில் அவரே நடித்து தயாரித்திருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஞானவேல் ராஜா இயக்கியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் படத்தை பாராட்டி வருகின்றனர். இவ்வளவு ஏன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூட திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இருளர் பழங்குடி மக்களின் வாழ்வியலை உரக்கச்சொல்லும் அரசியல் படமாக ஜெய் பீம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்நிலையில் படத்தில் பலரையும் கவர்ந்த அர்த்தமுள்ள காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.






அதில் சூர்யா நாற்காலியில் அமர்ந்து , கால் மேல் கால் போட்டுக்கொண்டு செய்தித்தாள் வாசிக்கிறார். அதனை கண்ட  பழங்குடியின சிறுமி , சூர்யா செய்வதை போலவே கையில் செய்தித்தாளை எடுத்துக்கொண்டு வாசிப்பது போல் அமர்கிறாள். அதனை சூர்யா தனது கடைக்கண்ணால் பார்க்கிறார். அதனை கண்ட சிறுமி பயந்தவளாய் செய்தித்தாளை மடிக்க...கண்களாலேயே சூர்யா “செய்” என்கிறார். உடனே சிறுமி கால் மேல் கால் போட்டுக்கொண்டு செய்தித்தாளை படிக்க துவங்குகிறாள்..இப்படியாக நகரும் அந்த காட்சியை இணையத்தில் பகிர்ந்த சில தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதாவது சட்டமோ , வாழ்க்கையோ அனைவருக்கும் சமமானதுதான். அதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது என ஒற்றை காட்சியில் அழுத்தமாக பதித்திருக்கிறார் இயக்குநர்.






ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கும் ‘ஜெய் பீம்’ என்னும் வார்த்தையை படத்தின் தலைப்பாக வைத்ததுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது. படம் இன்று வெளியான நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்றே கூற வேண்டும். படத்தை பார்த்த திரைத்துறையினர் படத்தை வெகுவாக பாராட்டும் சூழலில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையே தனது பெரும்பாலான படங்களில் வெளிச்சம் போட்டு காட்டிய இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெய் பீம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் “சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.அது நம் தலைமுறையை மாற்றும்.ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த சூர்யா, ஞானவேல் ஆகியோருக்கு பெரும் நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.